IPL 2020: பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் த்ரில் வெற்றி பெற்ற பஞ்சாப்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற ஐ.பி.எல். லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் தொடரின் 31வது லீக் போட்டி சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸையும், கொல்கத்தா நைட்ரைடர்ஸையும் வென்றிருந்த ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி வரிசையை தக்க வைக்கும் முனைப்பிலும், தொடர்ந்து தோல்வியையே சந்தித்துவந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற வெறியுடன் எதிர்கொண்டன. டாஸில் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபின்ச் மற்றும் படிக்கல் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கோலி நிதானமாக விளையாடத் தொடங்கினார். எப்பொழுதும் 4வது விக்கெட்டுக்கு களமிறங்கும் டி வில்லியர்சுக்கு பதிலாக நேற்று வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். பேட்டிங் ஆர்டரில் கோலி செய்த மாற்றம் பெரிதாக கை கொடுக்காத நிலையில், வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 6வது விக்கெட்டுக்கு களமிறங்கிய டி வில்லியர்ஸ் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். மிக நிதானமாக விளையாடிய கோலி 39 பந்துகளில் 3 பவுண்டரிகள் மட்டும் அடித்து 48 ரன்களில் அவுட்டானார். கடைசியாக களமிறங்கிய க்றிஸ் மோரிஸ் 8 பந்துகளில் 1 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 25 ரன்களை விளாச அணியின் ஸ்கோர் உயர்ந்தது.

20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்தது. மோரிஸ் 25 ரன்களுடனும், உதானா 10 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தனர்.

பஞ்சாப் அணி தரப்பில் ஷமி மற்றும் அஷ்வின் ஆகியோர் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப், ஜோர்டன் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பஞ்சாப் அணி. கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் இணை தொடக்கம் முதலே அதிரடி காட்ட, அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 8 ஓவர்களில் 78 ரன்கள் எடுத்திருந்த இந்த இணையை சாஹல் பிரித்தார். 25 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 45 ரன்கள் எடுத்திருந்த மயங்க் அகர்வால் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய கெயில் நிதானமாக விளையாடத்தொடங்கி பின்னர் அதிரடி காட்ட 19.4வது ஓவரில் போட்டி சமனானது. 1 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 19.5வது ஓவரில் கெயில் ரன் அவுட் ஆகி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 1 பந்தில் 1 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், களமிறங்கிய நிகோலஸ் பூரன் சிக்ஸர் விளாச வெற்றி இலக்கை எட்டி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 49 பந்துகளில் 1 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உள்பட 61 ரன்களுடன் கே.எல்.ராகுலும், நிகோலஸ் பூரன் 6 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

பெங்களூரு அணி தரப்பில் சாஹல் 1 விக்கெட் வீழ்த்தினார். 61 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த பஞ்சாப் அணி கேப்டன் கே.எல்.ராகுல் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

8 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி 3 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் பெங்களூரு அணி 3வது இடத்திலும், 8 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி 6 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் பஞ்சாப் அணியும் உள்ளன.

தொடரின் 32வது லீக் போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே அபுதாபி, சேக் சையத் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

Exit mobile version