ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக்கு 207 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல்.2020 தொடரின் 6வது போட்டி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற பெங்களூரு அணி, முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதனையடுத்து, பஞ்சாப் அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மயங்க் அகர்வால் ஆட்டமிழந்தார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ராகுல், 36 பந்துகளில் அரை சதம் விளாசினார். மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய ராகுல் 62 பந்துகளில் 12 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட சதம் விளாசினார்.
19-வது ஓவரை வீசிய ஸ்டெயினின் பந்துவீச்சில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளை ராகுல் விளாச அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களை விளாசியது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. 69 பந்துகளில் 14 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உள்பட 132 ரன்களுடனும், கருண் நாயர் 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் இருந்தனர்.
பெங்களூரு அணி தரப்பில் சிவம் டுபே அதிகபட்சமாக 2 விக்கெட்களையும், யுவேந்திர சாஹல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி தனது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக தேவ்தத் படிக்கல் மற்றும் ஃபின்ச் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.