அமெரிக்காவின் வயிற்றில் மட்டுமல்ல அகில உலகத்தின் வயிறுகளிலும் அவ்வப்போது புளியைக் கரைப்பவர் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன். விநோதமான தண்டனைகளுக்குப் பெயர் பெற்ற இவர் இம்சை அரசனின் 21ஆம் நூற்றாண்டுக்கான பதிப்பு. சமீபத்தில் தனது உயர் அதிகாரி ஒருவரை மீன்களுக்கு இரையாக்கி மரண தண்டனை நிறைவேற்றியதால் இணையத்தில் இன்னொரு சுற்று வலம்வர ஆரம்பித்திருக்கிறார் கிம் ஜாங் உன். யார் இவர்? எங்கிருந்து இவ்வளவு அதிகாரங்களைப் பெற்றார்?
வடகொரிய அரசை நிறுவிய கிம் இல் சுங்கின் பேரன்தான் இந்த கிம் ஜாங் உன். வடகொரிய முன்னாள் அதிபர் கிம் ஜாங் இல் இவரது தந்தை.
கிம் ஜாங் உன் எந்த ஆண்டு பிறந்தார் என்பது கூட இராணுவ ரகசியம்தான். 1982 ஜனவரி 8ல் கிம் பிறந்தார் என்று வடகொரிய அரசு தெரிவித்தாலும், ‘இல்லை அவர் 1983ல்தான் பிறந்தார்’ – என்று மறுக்கிறது தென்கொரியா.
பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரத்தில், வடகொரிய தூதரக அதிகாரி ஒருவரின் மகன் என்ற போர்வையில் கிம் ஜாங் உன் வளர்க்கப்பட்டார். அங்கு ’பாக் சோல்’ என்ற பெயரில் அவர் தொடக்கக் கல்வி பெற்றதாகக் கூறப்படுகிறது.
இப்போது அமெரிக்காவையே எதிர்த்துப் பேசும் கிம் தனது இளமைக் காலத்தில் மிகவும் பயந்த சுபாவம் கொண்ட மாணவராக அறியப்படுகிறார். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்த கிம்மின் பிரதான பொழுதுபோக்கு கூடைப் பந்து, பிடித்த விளையாட்டு வீரர் மைக்கேல் ஜோர்டான்.
2010ஆம் ஆண்டின் போதுதான் கிம்மை வடகொரியர்களுக்கே தெரியும். 2011ல் வட கொரிய அதிபரும், தனது தந்தையுமான கிம் ஜாங் இல்-லின் மறைவுக்குப் பின்னர் கிம் ஜங் உன் வடகொரியாவின் புதிய அதிபராகப் பதவி ஏற்றார்.
பதவியேற்ற உடனேயே ‘சுப்ரீம் லீடர்’ – என்ற அனைத்து அதிகாரங்களையும் கொண்ட ஆட்சியாளராக அவர் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டார். அப்போது எதிர்ப்பாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
ஆயுத பலம் மிக்க நாடாக வடகொரியாவை மாற்ற தந்தையின் வழியில் கிம் தொடர்ந்து முயன்றார், அதில் வெற்றியும் பெற்றார். அண்டை நாடுகள் முதல் அமெரிக்காவரை அனைவரையும் அச்சுறுத்தும் அணு ஆயுதங்கள் இவரது தனிப்பட்ட சாதனை.
தனது எதிர்ப்பாளர்களுக்கும், சந்தேகத்திற்கு உரியவர்களுக்கும் கிம் ஜாங் உன் அளிக்கும் ஒரே தண்டனை மரண தண்டனைதான். இப்படி அளிக்கப்பட்ட எந்த மரண தண்டனையும் எளிய முறையில் நிறைவேற்றப்பட்டதே இல்லை.
நாய்களைக் கொண்டு கடிக்க வைப்பது முதல் ராக்கெட்டுகளைக் கொண்டு வெடிக்க வைப்பது வரை எதிராளிகளைக் கொல்ல பல விநோத முறைகளை கிம் ஜாங் உன் கையாண்டு உள்ளார். இந்த தண்டனைகளில் சில லட்சக்கணக்கான மக்கள் சூழ மைதானங்களில் நிறைவேற்றப்பட்டன.
வட கொரியாவில் இருந்து புகைப்படங்கள், வீடியோக்கள் எதையும் வெளி உலகம் எளிதாகப் பெற முடியாது என்ற நிலையில், கிம் ஜாங் தொடர்புடைய செய்திகள் ஒவ்வொன்றும் அதிக முக்கியத்துவத்தைப் பெறுகின்றன.
ஐ.நா.வோ, மனித உரிமை அமைப்புகளோ, அமெரிக்காவோ – எதிர்க்கவோ எட்டிப் பிடிக்கவோ முடியாத அளவுக்கு ஆயுதங்களையும் அதிகாரங்களையும் குவித்து வைத்துள்ள கிம் ஜாங் உன் வரலாற்றின் பக்கங்களில் தனது குழந்தை முகத்திற்காகவும் கொடூர தண்டனைகளுக்காகவும் என்றென்றைக்கும் நினைவு கூரப்படுவார்.