எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை பணி அமர்த்துவது தொடர்பான அரசாணை, ஜனவரி 30 ஆம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்படாது என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
அரசு புதிதாக தொடங்கியுள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் வின்சென்ட் பால்ராஜ், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன், எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு, மாண்டிசோரி அல்லது கிண்டர் கார்டன் பயிற்சி பெற்றவர்களையே நியமிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இடைநிலை ஆசிரியர்களை எவ்வாறு பணி அமர்த்துகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் தளர்வு கோரி, தேசிய ஆசிரியர் கல்வி கழகத்தில் விண்ணப்பித்துள்ளதாகவும், அது நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், ஜனவரி 30 ஆம் தேதி வரை இந்த அரசாணை நடைமுறைப்படுத்தப்படாது எனவும் தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கை 30 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.