வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2 மாதங்களுக்கு முன்பு, அணு ஆயுதங்களை பயன்படுத்தாமல் இருப்பது குறித்து வடகொரிய அதிபர் கிம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் ஹன்னோவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அந்த விவகாரத்தில் இதுவரையில் உறுதியான முடிவுகள் எட்டப்படவில்லை.
இந்நிலையில் வடகொரியாவுக்கு, சீனாவுக்கு நிகரான பலத்தை நிரூபிக்கும் வகையிலான தேவை ஏற்பட்டுள்ளது. இதனிடையே ரஷ்ய நாட்டின், விளாடிவோஸ்டக் நகருக்கு பயணப்படும் வடகொரிய அதிபர் கிம் ஜாங், ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா -ரஷ்யா இடையே பனிப்போர் நிகழ்ந்து வரும் நிலையில், கிம்மின் ரஷ்யப் பயணம் சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதேபோல், கடந்த ஓராண்டுக்குள் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, கிம் 4 முறை சந்தித்து சுமூக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.