காதல் திருமணம் செய்த பெண் கடத்தப்பட்ட சம்பவம்!

தென்காசி அடுத்த கொட்டாகுளத்தைச் சேர்ந்த வினித்தும், செங்கோட்டை பிரானூரைச் சேர்ந்த கிருத்திகா பட்டேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். வினித்தின் வீட்டில் அவரது உறவினர்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடந்தது. இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் கிருத்திகாவின் பெற்றோர் தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், குத்துக்கல்வலசை பகுதியில் வினித் மற்றும் கிருத்திகா காரில் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை கிருத்திகாவின் பெற்றோர் அடியாட்களுடன் மடக்கியுள்ளனர்.

அவர்களிடம் இருந்து தப்பிக்க அருகில் உள்ள கட்டிடத்துக்குள் புகுந்த ஜோடியை விரட்டியவர்கள், கிருத்திகாவை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றனர்.
இது தொடர்பாக காவல்நிலையத்தில் வினித் புகார் அளித்ததை தொடர்ந்து கிருத்திகாவின் பெற்றோர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தன்னை யாரும் கடத்தவில்லை, தனக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆகிவிட்டது, இதற்குப் பிறகு இந்த சம்பவம் குறித்து யாரும் பேசவேண்டாம் என்று கிருத்திகா பேசிய வீடியோ வெளியாகியிருக்கிறது.ஆனால், கிருத்திகாவை கட்டாயப்படுத்தி இந்த வீடியோவில் பேச வைத்திருப்பதாகக் கூறும் வினித், கிருத்திகாவுக்கு ஏற்கனவே திருமணமான எந்த ஆதாரமும் இல்லை என்கிறார். தனது மனைவியை தன்னுடன் சேர்த்துவைக்கவும் அவர் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

பொது இடத்தில் கடத்தப்பட்ட பெண்ணையும், கடத்தியவர்களையும் இன்னும் போலீசாரால் கண்டுபிக்க முடியவில்லை என்கிறார்கள். அப்படியிருக்க.. கிருத்திகா பேசி வீடியோ வெளியிடுகிறார் என்றால் காவல்துறையின் நடவடிக்கையும் ஒருதலைப்பட்சமாக இருக்கிறதோ என்று அந்தப் பகுதியினர் சந்தேகத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Exit mobile version