லாக்கப் டெத் விவகாரங்களை கண்டும் காணாத மாதிரி இருக்கிறாரா ஸ்டாலின்?

தமிழகக் காவல்துறையைவிட சிறந்த காவல்துறை எங்குமில்லை என்று நாம் மார்தட்டும் இதே காலக்கட்டத்தில்தான், லாக்கப் மரணங்கள் மலிவாகி போய்விட்டது. அதிலும் இந்த விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து முதல் ஓராண்டிலேயே எட்டு லாக்கப் மரணங்கள் நடந்தேறி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அன்றைக்கு தேர்தல் பிரச்சாரத்தின் போது, ”காவல்துறை என்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும். காவலர்கள் தவறு செய்தால் முறையான நடவடிக்கை எடுப்பேன்” என்று ஸ்டாலின் உரக்க கூச்சலிட்டார். ஆனால் அக்கூச்சல் வெற்றுக் கூச்சல்தான் என்று அப்போது புரியவில்லை..இப்போது புரிகிறது.

தஞ்சாவூர் சத்யவாணன், ராமநாதபுரம் மணிகண்டன், சேலம் பிரபாகரன், சென்னை விக்னேஷ், திருவண்ணாமலை தங்கமணி, கொடுங்கையூர் ராஜசேகர், கன்னியாகுமரி அஜித்,  இப்போது தென்காசி கந்தாசாமி என்று லாக்கப்பில் மரணமானவர்கள் என ஒரு பட்டியலே வெளியிடலாம். தற்போது மரணம் எய்தியிருக்கும் கந்தசாமி மதுபானம் விற்கிறார் என்று கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரை லாக்கப்பில் அடைத்துவைத்து சித்ரவைதை செய்துள்ளனர் காவல்துறையினர். கைது செய்து இரண்டு நாள் கழித்து மரணமடைந்த கந்தசாமியின் உடற்கூறாய்வில் சித்ரவதை செய்யப்பட்டிருப்பது புலப்பட்டுவிட்டது. எங்கே நாம் மாட்டிக்கொண்டுவிடுவோமோ என்றெண்ணி கந்தசாமியின் மரணத்தை மறைத்திருக்கிறது காவல்துறை. எப்படியோ இந்த செய்தி கசிய வந்ததில் திமுக ஆட்சியின் சட்ட ஒழுங்குதான் மக்களிடையே பல் இளிக்கிறது.

காலனிய ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட காவல்துறையானது “obey the order” என்கிற கீழ்படிதலின் விதிக்கு கீழ் தங்கள் அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்து வருவது  காலம்காலமாக நிகழ்ந்துவரும் ஒரு சம்பிரதாய சடங்காகிவிட்டது. அதிலும் முக்கியமாக காவல்துறையின் விழிகள் விளிம்புநிலை மக்களை நோக்கியே தங்கள் அதிகார வெறியாட்டத்தை கட்டவிழ்க்கிறது. கூலித் தொழிலாளிகள், விவசாயிகள், பாமர ஏழைகள் என்று யார் அதிகார அளவில் பலம் குன்றி இருக்கிறார்களோ அவர்களையே குறிவைக்கின்றன காவல்துறையின் பூட்ஸ்கள்.

ஜெய்பீம் திரைப்படம் பார்த்து மிகவும் கலக்கம் அடைந்தேன். எனக்கு உறக்கமே வரவில்லை என்று சொன்ன முதல்வர் ஸ்டாலின்  தினந்தோறும் யாரோ ஒருவர் லாக்கப்பில் மரணம் அடைவது குறித்து கவலை கொண்டிருக்கிறாரா?  திரைப்படத்திற்காக தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், நிஜ சம்பவங்களுக்காக என்றைக்கு குரல் கொடுக்கப் போகிறார்?  தன் கையில் காவல்துறையை வைத்துக்கொண்டு ஏவல்துறையாக மட்டுமே அதனை பயன்படுத்தும் ஸ்டாலின் தவறு இழைத்த காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பாரா?

Exit mobile version