உலக புகழ் பெற்ற நாகூர் தர்காவின் கந்தூரி விழாவையொட்டி, பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
நாகை மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 463ஆம் ஆண்டு கந்தூரி விழா வருகிற 26 ஆம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி தர்காவில் உள்ள 5 மினராக்களின் உச்சியில் பாய்மரம் எனும் கொடிமரம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தர்காவின் சாகிபுமார்கள் சிறப்பு துவா ஓதி பாய்மரத்திற்கு பாத்திஹா செய்தனர். அதனைத் தொடர்ந்து வாத்தியம், அதிர்வேட்டுகள் முழங்க ஒவ்வொரு மினாராக்களிலும் ஒன்றன் பின் ஒன்றாக பாய்மரங்கள் ஏற்றப்பட்டன.
விழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களுக்கு பாரம்பரிய முறைப்படி மண் ஓட்டில் தப்ருக் எனப்படும் சீனி பிரசாதமாக வழங்கப்பட்டது. ஜனவரி 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் மற்றும் ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது.