டிக்-டோக் போன்ற சமூக ஊடகங்களில் சமீபத்தில் அதிக பிரபலமாகி வரும் பானம் FUL-JAR SODA. பெயருக்கேற்றார் போலவே இந்த சோடாவின் தயாரிப்பு முறையும், வரலாறும் சுவாரஸ்யமானவை… சுவையான FUL-JAR SODA-வின் கதை இதோ உங்களுக்காக…
சோடாக்களில் பல்வேறு வகைகள் இருக்கும் போது, இந்த FUL-JAR SODA மட்டும் ஏன் மிகவும் பிரபலமாகியுள்ளது என்பதைப் பார்ப்பதற்கு முன்னால், சில சுவாரஸ்யமான வீடியோக்களை பார்த்துவிடலாம்…
கேரளாவை பிறப்பிடமாக கொண்ட இந்த FUL-JAR SODA பச்சை மிளகாய், இஞ்சி, புதினா, எலுமிச்சைபழம், நன்னாரி விதை, உப்பு போன்ற பல்வேறு பொருட்களைக் கொண்டு தயார் செய்யப்படுகிறது.
கேரள இஸ்லாமிய மக்கள் திருமணம் போன்ற பல்வேறு விசேஷங்களை இரவு நேரங்களில் கொண்டாடுவதால் விருந்து முடிந்தபின், செரிமானத்திற்காக அருந்தி வந்த பாரம்பரிய பானம் தான் இந்த FUL-JAR soda.
தற்போது வியாபார உத்தியாக, அரைத்து தயார் செய்யப்பட்ட இஞ்சி, புதினா, பச்சைமிளகாய் சாறு சிறிய கோப்பையிலும், சோடாவை தனியாக ஒரு பெரிய கோப்பையிலும் நிரப்பி சோடாவை அருந்துவோரிடம் தருகிறார்கள். சிறிய ஜாடியை பெரிய ஜாடிக்குள் போடும் பொழுது அதீத வேகத்துடன் சோடா மேலே பொங்கி எழும்புவதால் வாடிக்கையாளர்களுக்கு இது சுவையோடு, சுவாரஸ்யமான அனுபவமாகவும் அமைகிறது.
கேரளாவிற்கு அடுத்தபடியாக சென்னையில் இந்த FUL_JAR SODA பிரபலமாகியிருப்பதால், இதை அருந்துவதற்காகவே பாண்டிச்சேரி, செங்கல்பட்டு போன்ற ஊர்களிலிருந்து சென்னைக்கு வாடிக்கையாளர்கள் வருவதாக சொல்கிறார்கள் உரிமையாளர்கள்.
பாரம்பரிய கேரள பானமான இந்த FUL-JAR SODA மக்களைக்கவரும் வகையில் Blulime, Mint, strawberry போன்ற இளைஞர்களைக் கவரும் புதிய சுவைகளிலும் தயாரிக்கப்படுகிறது.