மதுபானம் கிடைக்காத விரக்தியில் தற்கொலைகள் அதிகரித்து வருவதால், மருத்துவர்கள் பரிந்துரைத்த நபர்களுக்கு மதுபானம் வழங்க வேண்டும் என கேரள மாநில முதலமைச்சர் பினராயி உத்தரவிட்டுள்ளார்.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் மதுபான விற்பனை முடங்கியுள்ளது. மதுபானம் கிடைக்காததால் கேரளாவில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. திருச்சூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் மது கிடைக்காத விரக்தியில் அண்மையில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மதுபானத்துக்கு அடிமையானவர்களின் தற்கொலையை தடுக்கும் விதமாக, மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் நபர்களுக்கு மதுபானம் வழங்க கலால்துறைக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். மதுபானம் கிடைக்காததால் விரக்தி அடைந்தவர்களுக்கு போதை மறுவாழ்வு மையத்தில் இலவச சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.