கர்நாடகத்தில் தென்பெண்ணையாற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கெலவரப்பள்ளி அணை அமைந்துள்ளது.
கர்நாடகத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கெலவரப்பள்ளி
அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் உச்ச நீர்மட்டம் 44 புள்ளி இரண்டு எட்டு அடியாகும்.
இன்று காலை நிலவரப்படி அணையில் 41 புள்ளி ஐந்து அடிக்குத் தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து நேற்று 568 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை 808 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து மேலும் அளவு அதிகரிக்கும் என்பதாலும், பாதுகாப்புக் கருதியும் அணையிலிருந்து 808 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ள நீர் கிருஷ்ணகிரி அணைக்குச் செல்கிறது. கெலவரப்பள்ளி அணை முழுக்கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் அணையை நம்பிஉள்ள ஓசூர், சூளகிரி வட்டார விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.