கேளோ இந்தியா 2020 போட்டிகள் பற்றி செய்தி தொகுப்பு

சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இந்தியா இடம்பெறுமா என்ற ஏக்கத்தை போக்கும் வகையில் துவங்கப்பட்டுள்ளது கேளோ இந்தியா. இந்திய அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்படும் கேளோ இந்தியா போட்டிகள் குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு…

சர்வதேச அளவில் இளைஞர்களை அதிகம் கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. மிகவும் இளமையான நாடாக விளங்கினாலும் கிரிக்கெட்டைத் தவிர மற்ற போட்டிகளில் பிரபலமான வீரர்கள் இல்லாதது இந்தியாவின் மிகப்பெரிய குறையாக பார்க்கப்படுகிறது . 1900 வருடத்திலிருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வந்த இந்தியா தன்னுடைய முதல் தனிநபர் தங்கத்தை  108 வருடங்கள் கழித்தே வென்றது. 2008ம் ஆண்டு சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை பெற்று தந்து 100 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார் தங்க மகன் அபினவ் பிந்திரா…

இதைத் தொடர்ந்து பல்வேறு தடகள விளையாட்டுகளில் ஆங்கொன்றும் இங்கொன்றுமாய் வீரர்கள் உதயமாகி வருகின்றனர். பாட்மிண்டன் விளையாட்டில் பிவி சிந்து, தடகளத்தில் ஹீமா தாஸ், குத்துச்சண்டையில் மேரி கோம் உள்ளிட்டவர்களை இதில் குறிப்பிடலாம்.

இந்த நிலையை மாற்றி சர்வதேச மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில்  பதக்கங்களை குவிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை மத்திய விளையாட்டு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கேளோ இந்தியா என்ற நிகழ்ச்சி கடந்த 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதைத் தமிழில் சரியாய் மொழி பெயர்த்தால் விளையாடு இந்தியா எனப் பொருள் கொள்ளலாம்.

இந்த வருடம் அஸ்ஸாம் தலைநகர் குவாஹத்தியில் கேளோ இந்தியா விளையாட்டுப்  போட்டிகள் துவங்கியுள்ளன. இந்திய அளவில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்தப் போட்டியில் 37 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 6800-க்கு மேற்பட்டோா் கலந்து கொள்கின்றனா். இரண்டு பிரிவுகளாக நடைபெறும் போட்டியின் முதல் பிரிவில் 17 வயதுக்கு உட்பட்ட விளையாட்டு வீரர்களும் 2வது பிரிவில் 21 வயதுக்கு உட்பட்ட வீரர்களும் பங்கேற்கின்றனர்.

வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், கால்பந்து, வாலிபால், ஹாக்கி, ஜிம்னாஸ்டிக்ஸ், கபடி, நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ் உள்பட மொத்தம் 19 வகையான விளையாட்டுகளில் போட்டிகள் 11 இடங்களில் நடக்கின்றன.
 
இத்தகைய போட்டிகள் மூலம் விளையாட்டுத் துறைக்கு உத்வேகம் கிடைப்பதோடு, ஆசிய, ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத்தரும் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சர்வதேச அளவில் பயிற்சிகள் வழங்க  மத்திய விளையாட்டுத் துறை திட்டமிட்டுள்ளது.

இந்த வருடம் புதிதாக  லான்ஸ்பௌல்ஸ், சைக்கிளிங் உள்ளிட்ட விளையாட்டுகள் சோ்க்கப்பட்டுள்ளன. தொடக்க விழாவில் அஸ்ஸாம் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள், நவீன லேசா் காட்சிகள் இடம் பெற்றன. யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள லடாக்கிலிருந்து முதன்முறையாக 2 வில்வித்தை வீரா்கள், 5 குத்துச்சண்டை வீரா்கள் களமிறங்குகின்றனர்.  கேளோ இந்தியா நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களுக்கு எட்டு வருடங்களுக்கு, வருடத்திற்கு 5 லட்ச ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.

சமீபத்தில் நிகழ்ச்சி  ஒன்றில் பேசிய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, 2020 மற்றும் 2024 ஒலிம்பிக்ஸில் நமது இளைஞர்கள் சாதிப்பார்கள் எனவும் 2028 ஒலிம்பிக்கில் இந்தியாவின் உண்மையான திறன் உலகிற்கு எடுத்துரைக்கப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

சீனா உள்ளிட்ட நாடுகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் தங்கள் வீரர்களுக்கு  இளம் வயது முதலே பயிற்சியைத் துவங்கி விடுவர். இதனால் ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் அந்நாடுகளால் அதிகம் பதக்கங்களை குவிக்க முடிகிறது. விளையாடு இந்தியா போட்டிகள் மூலம் தரம் வாய்ந்த வீரர்கள் அடையாளம் காணப்பட்டு ஊக்குவிக்கப்படுவதால் இந்தியாவும் விரைவில் பதக்கப் பட்டியலில் முன்னிலை பெறும் என எதிர்பார்க்கலாம்.

Exit mobile version