பிரான்ஸ் நாட்டின் மார்ஸெய்லீ பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டாம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். ஆரம்பத்தில் ஸ்கேர்லெட் என்ற அரிய வகை காய்ச்சல் என மருத்துவர்கள் அதற்கு சிகிச்சையளித்தனர். சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அதே நாளில் மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
அப்போது, கவாசகி என்ற என்ற நோயின் அறிகுறிகள் தென்பட்டதால் அதற்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்துள்ளனர். கவாசகி என்பது ரத்தக்குழாய்களில் அடைப்பு மற்றும் நீணநீர் சுரப்பியில் வீக்கம் ஏற்படுத்தும் அரிய வகை நோயாகும். அதற்கு சிகிச்சைபெற்று குணமடைந்து திரும்பிய அச்சிறுவன் எட்டு நாட்களுக்குப் பிறகு மாரடைப்பு மற்றும் மூளை பாதிப்படைந்து உயிரிழந்துள்ளான்.
அந்த சிறுவன் முதன் முதலில் அனுமதிக்கப்பட்டபோது கொரோனா தொடர்பு இருப்பது ரத்த பரிசோதனையில் தெரியவந்தது. ஆனால் அறிகுறிகள் ஏதுமில்லை. பிறகு ஸ்கேர்லெட் காய்ச்சலாகத் தெரிந்ததால் அதற்கு சிகிச்சையளித்தோம் என அந்த சிறுவன் முதன் முதலில் அனுமதிக்கப்பட்ட மார்ஸெய்லீ மருத்துவமனையின் சிறார் அவசர சிகிச்சைப்பிரிவு தலைமை மருத்துவர் ஃபேப்ரிஸ் மைக்கேல் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸைப் பொருத்தவரை நூற்று நாற்பத்து நான்குபேர் கவாசகி நோய்க்கு சிகிச்சைபெற்று குணமடைந்துள்ளனர். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு நான்கு வாரங்களுக்குப் பிறகு சிறார்களுக்கு கவாசகி நோய் ஏற்படுவதையும் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். அதனால் இரண்டு நோய்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்தில் லண்டனில் ஒரு இளைஞர் கவாசகி நோயால் உயிரிழந்த நிலையில், ஐரோப்பாவில் இந்த நோயால ஏற்பட்டிருக்கும் இரண்டாவது உயிரிழப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.