காசியின் குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை அழிக்க முயன்றதாக காசியின் தந்தை கைது!

காதல் வலை விரித்து, சிறுமிகள் முதல் இளம் பெண்கள் வரை… பல பெண்களை ஏமாற்றிய காதல் ரோமியோ காசியின் வழக்கில், அவரது தந்தை தங்கப் பாண்டியனும் கைது செய்யப்பட்டுள்ளார். காசியின் மீது குண்டர் சட்டம், போக்ஸோ, கந்து வட்டி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளநிலையில், அவரது கூட்டாளிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கப் பாண்டியன். கன்னியாகுமரியில் பல இடங்களில் கடை நடத்திவரும் தங்கப்பாண்டியன், தனது கடும் உழைப்பால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியவர். அவரது மகன் காசி, பிராய்லர் கோழிகளை வாங்கி மொத்த வியாபாரம் செய்து வந்தார். சிறு வயது முதல் தொடர்ந்து செய்து வந்த உடற்பயிற்சியின் காரணமாக, கட்டுடல் வாய்க்கப் பெற்ற காசி, பள்ளியில் படிக்கும் நாட்களிலேயே தீய வழியில் பயணிக்கத் தொடங்கிவிட்டார். மேலும், பள்ளியில் தன்னுடன் படித்த மாணவிகளிடம், காசி தன்னை தொழிலதிபரின் மகன் என்றும், பணக்கார வீட்டுப் பையன் என்றும் கூறி அவர்களை ஏமாற்றுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள் வந்தபிறகு, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் போலியாகப் பல கணக்குகளைத் தொடங்கிய காசி, அதன்மூலம் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள பெண்களை ஏமாற்றத் தொடங்கினார். சமூக வலைதளங்களில் காசியின் போட்டோக்களுக்கு லைக், கமெண்ட் இடும் பெண்களைக் குறிவைத்து, அவர்களிடம் நட்பாகப் பழகி, பின்னர் அவர்களைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றுவது காசியின் ஸ்டைல்.

காசியின் வார்த்தைகளை நம்பி, அவருடன் பெண்கள் நெருக்கமாக இருக்கும் நேரத்தில், அதை வீடியோ எடுத்துக் கொள்ளும் காசி, அதை வைத்து மிரட்டி சம்பந்தப்பட்ட பெண்களிடம், பணம் வசூலிப்பதையே காசி தனது தொழிலாக மாற்றினார். காசியிடம் ஏமாந்த பெண்கள் பணம் கொடுப்பதை நிறுத்தும்போது, அவர்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது நண்பர்கள் உதவியுடன் இணையத்தில் வெளியிடுவதுமாக இருந்தார் காசி. அப்படி காசியை நம்பி ஏமாந்த சென்னையைச் சேர்ந்த டாக்டர் பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி காசி கைது செய்யப்பட்டார். அதையடுத்து காசி மீது கோட்டார், வடசேரி, நேசமணி நகர் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் அடுத்தடுத்துப் பல பெண்கள் புகார் கொடுத்தனர். காசி மீது போக்ஸோ, பாலியல் பலாத்காரம், கந்து வட்டி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி காசி மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.

மேலும் காசிக்கு உதவியாக இருந்து, பணம் கொடுக்க மறுக்கும் பெண்களை, அடித்துத் துன்புறுத்திய டேசன் ஜினோ என்ற காசியின் நண்பரும் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு காசியின் வழக்கு, சி.பி.சி.ஐ.டி காவல்துறைக்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு, காசியின் மற்றொரு கூட்டாளியும், காசியால் ஏமாற்றப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் கூறுவதுபோல் நடித்து, அந்தப் பெண்களை மற்றொரு முறை ஏமாற்றியவருமான தினேஷ் என்பரும் கைது செய்யப்பட்டார். மேலும், வெளிநாட்டில் உள்ள கௌதம் என்ற காசியின் மற்றொரு கூட்டாளியை இந்தியா அழைத்து வரும் முயற்சியிலும் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், காசி நடத்திய கந்து வட்டி கொடுமைகளை அறிந்த சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர், அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அதில் ஏராளமான பென் டிரைவ், மெமரி கார்டுகள், செல்போன்கள், பரிசு பொருட்கள் போன்றவை சிக்கின. இந்நிலையில், காசியின் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததாகச் சொல்லி அவரது தந்தை தங்கப்பாண்டியனும் கைது செய்யப்பட்டுள்ளார். இளம் பெண்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடங்கிய காசியின் லேப்-டாப் கணிணியை மறைத்தது மற்றும் அதில் உள்ள ஆதாரங்களை அழிக்க முயன்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் காசியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Exit mobile version