ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்களை அக்டோபர் 1ஆம் தேதி முதல் உச்ச நீதிமன்றத்தின் 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க உள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடரின் போது ஜம்மு காஷ்மீர்க்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கும் சட்டபிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்தது. 370-ஐ ரத்து செய்த மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராகவும், காஷ்மீரில் தொடர்ந்து வரும் கெடுபிடிகளை தளர்த்த கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டோர் உச்சமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு, இந்த வழக்குகளை 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என தெரிவித்தது. அதன்படி உச்சநீதிமன்ற மூத்த நீதிபதியான ரமணா தலைமையிலான அமர்வில் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், சுபாஷ் ரெட்டி, கவாய், சூரிய கந்த் ஆகியோர் இந்த வழக்குகளை அக்டோபர் 1ஆம் தேதி முதல் விசாரிக்கவுள்ளனர்.