கரூர் மாவட்டத்தை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக உருவாக்க, பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவை என மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதிலும் வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வை கிராம மக்களிடையே ஏற்படுத்தும் விதமாக, கரூர் மாவட்டம் முழுவதிலும் உள்ள 157 கிராம ஊராட்சிகளில், சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பிளாஸ்டிக் பைகள், தட்டுகள், டம்ளர்கள், குடிநீர் பாக்கெட்டுகள் போன்றவற்றை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என தெரிவித்தார். பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக உருவாக்க பொதுமக்களின் ஒத்துழைப்புஅவசியம் தேவை எனவும் அவர் கூறினார்.