சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் போராட்டங்களில் தன் வாழ்நாளை அர்ப்பணித்துகொண்ட கறுப்பினப்போராளி
1940ஆம் ஆண்டு கென்யாவில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்தவர்தான் வங்காரி மாத்தாய். அந்தக் காலத்திலேயே கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண், கென்யா நாட்டில் முதன்முதலாக டாக்டர் பட்டம் பெற்ற பெண் எனும் பெருமையைப் பெற்றார். நைரோபி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். அப்பல்கலைக்கழகத்தின் முதல் பெண் பேராசிரியர் இவர்தான்.
இவர் அமெரிக்காவில் இருந்தபோது மாட்டின் லூதர் கிங் நடத்திய போராட்டங்களால் ஈர்க்கப்பட்டார். பின்பு பசுமைப் பட்டை எனும் சுற்றுச்சூழலைக் காக்கும் இயக்கத்தைத் தொடங்கித் தனது வீட்டின் அருகே ஒன்பது மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்தார். உலகைச் சமநிலைப்படுத்தும் இயற்கையைப் பாதுகாக்க, ஆப்பிரிக்க வன வளத்தைக் காக்கவும் தனது பணிகளை வரையறுத்துக்கொண்டார் வங்காரி.
முப்பது ஆண்டுகளில் 5 கோடி மரங்கள் எனும் வியக்க வைக்கும் இலக்கைத் தன் இயக்கத்தின் குறிக்கோளாகக் கொண்டு வெற்றி பெற்றார். சுற்றுச்சூழல் மட்டுமல்லாமல் கல்வி சாந்த விழிப்புணர்வுப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பெண்களுக்கான தேசிய கவுன்சிலின் தலைவியானார். இதனால் தனது கோரிக்கைகளை நாடு முழுவதும் கொண்டு செல்லத் தொடங்கினார்.
2002ஆம் ஆண்டு கென்யாவில் நடந்த தேர்தலில் போட்டியிட்ட வங்காரி மாத்தாய் அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றார். சுற்றுச் சூழல் இணை அமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டார். இயற்கையைப் பாதுகாக்க எண்ணற்ற முயற்சிகளை எடுத்தார். அதேபோலப் பெண்கள் முன்னேற்றத்துக்கான அடிப்படை வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவும் அவர் மறக்கவில்லை. இதன் காரணமாக அவருக்கு 2004ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. நோபல் பரிசு பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண்மணியும் இவரே.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காகத் தன் வாழ்க்கையையே சமூகத்துக்கு அர்ப்பணித்த வங்காரி மாத்தாயின் நினைவு நாள் இன்று. இந்நாளில் நாமும் அவரை நினைவு கூர்வோம்.