அ.தி.மு.க-வினர் அரசியல் நாகரீகத்துடன் நடந்து கொள்வதாகவும், தன்னால் ஆதாயமடைந்த தி.மு.க-வினர் அநாகரீகமாக நடந்து கொள்வதாக கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி புலம்பியுள்ளார். அழகிரியின் இந்தப் பேச்சு திமுக-வில் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி, திமுக ஆட்சியில் இருந்தபோது, தி.மு.க-வின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்தார். அப்போது, கருணாநிதியின் தயவில், மத்திய அமைச்சர் பதவியையும் பெற்றார். அந்தக் காலகட்டத்தில், மு.க.அழகிரி, மதுரையை மையமாக வைத்து நடத்திய, வன்முறை அரசியல் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தின. அதே நேரம் மற்றொரு மகனான மு.க.ஸ்டாலினுக்கு தமிழகத்தின் துணை முதலமைச்சர் பதவியைக் கருணாநிதி கொடுத்திருந்தார். அதைப் பயன்படுத்தி, மு.க.ஸ்டாலின் சென்னையை மையமாக வைத்து, ஊழல் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார்.
கருணாநிதியின் வாரிசுகள், ஆளுக்கொரு பதவியில் இருந்தாலும், அவர்களுக்கு இடையேயான வாரிசுச் சண்டை எரிமலை போல் அடிக்கடி வெடித்து சிதறும். கருணாநிதி உடல் நலம் பாதித்து, நினைவை இழந்த நேரத்தில், மு.க.ஸ்டாலின் கட்சியைக் கைப்பற்றினார். தி.மு.க-வில் இருந்த சீனியர்களை ஓரம்கட்டிய மு.க.ஸ்டாலின், குடும்பத்தில் தனக்கு இடையூறாக இருந்தவர்களையும் கட்சியில் இருந்து வெளியேற்றினார். அதோடு, 6 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை வைத்திருக்கும், முரசொலி அறக்கட்டளையை, அவரது மகன் உதயநிதியிடம் ஒப்படைத்தார்.
தான் வகித்த திமுக இளைஞரணி செயலாளர் பதவியை வழங்கி அழகு பார்த்தார். இந்தப் போக்கை, மு.க.அழகிரி அப்போது கடுமையாக எதிர்த்தார். ஆனால், கட்சியில் ஸ்டாலின் கை ஓங்கியதால், மு.க.அழகிரிக்கு சீனியர்களின் ஒத்துழைப்பும், குடும்பத்தினர் ஆதரவும் கிடைக்கவில்லை. இதையடுத்து, அழகிரியுடன் தொடர்பு வைத்தால், தங்களையும் ஸ்டாலின் ஒதுக்கிவிடுவார் என்று அஞ்சி தி.மு.க-வினர் யாரும் அழகிரியுடன் பேசுவதைத் தவிர்த்தனர். இந்த நிலையில், மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில் மு.க.அழகிரி கலந்து கொண்டு பேசினார். அப்போது, அ.தி.மு.க-வினர் கூட என்னைப் பார்த்தால் பேசுவதுடன், அரசியல் நாகரீகமாக நடந்து கொள்வதாகவும், ஆனால், தன்னால் ஆதாயம் அடைந்த தி.மு.க-வினர் தன்னை மறந்துவிட்டதாகவும் புலம்பி தள்ளியுள்ளார்.
இந்த நிலை எப்போது மாறும் என்று தெரியவில்லை எனவும், மாறவில்லை என்றால், அவ்வளவுதான்… என்று மு.க.ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடும் தொனியிலும் மு.க.அழகிரி பேசினார்.
அழகிரியின் இந்தப் பேச்சு, தி.மு.க.விற்குள்ளும், கருணாநிதியின் குடும்பத்துக்குள்ளும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மு.க.அழகிரியின் புலம்பல் மு.க.ஸ்டாலினின் சர்வாதிகாரப் போக்கை அப்பட்டமாகக் காட்டுவதாக அமைந்துள்ளது.