கருணாநிதியின் சாதனைகளை பட்டியலிட்டு தீர்மானம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில்,
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுத்து, கருணாநிதி படத்திற்கு, க.அன்பழகன், மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனைத்தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், செயற்குழு  தீர்மானத்தை வாசித்தார். சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் கொடி ஏற்றுவதற்கான உரிமையை பெற்றுத் தந்தவர் கருணாநிதி என்று அவர் குறிப்பிட்டார். மகளிருக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியவர்  கருணாநிதி என்றும், பெண்களுக்கு சொத்துரிமை கிடைக்க நடவடிக்கை எடுத்தவர் என்றும் அவர் தெரிவித்தார்.  மாநிலச் சுயாட்சிக்காக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியவர் என்றும், மெட்ராஸ் என்பதை சென்னை என்று மாற்றியவர் கருணாநிதி என்றும் தீர்மானத்தில் புகழாரம் சூட்டப்பட்டது. செயற்குழு கூட்டத்தில் துரைமுருகன், கனிமொழி, பொன்முடி உள்ளிட்ட திமுக முன்னணி நிர்வாகிகளும், திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள்,
முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Exit mobile version