கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவரின் நிலைமை என்னானது தெரியுமா?

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டபோது அதனை எதிர்த்த மாணவர் உதயகுமார் படுகொலை செய்யப்பட்டார்.

1969 ஆம் ஆண்டு முதலமைச்சர் அண்ணாதுரையின் மறைவை அடுத்து, கருணாநிதி முதலமைச்சரானார். 1971 ஆம் ஆண்டில் முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்குச் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இது அந்தப் பல்கலைக் கழகத்தின் மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர்கள் இதற்கு எதிராகப் போராடினர். அந்தப் போராட்டத்தின் போது, ‘தகுதியற்றவருக்கு டாக்டர் பட்டமா?’ எனக் கேள்வி எழுப்பிய மாணவர் உதயகுமாரின் கதி என்னவானது என்பது இன்றைய தலைமுறைக்கு தெரியவாய்ப்பில்லை.

கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்படுவதை எதிர்த்த மாணவர்கள், கழுதையின் கழுத்தில் டாக்டர் பட்டம் என்று எழுதப்பட்ட பலகையை அணிவிப்பது, பல்கலைக்கழக சுவர்களில் கேலிச் சித்திரம் வரைவது – என்று பல வகைகளிலும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இப்படியாக எதிர்த்த மாணவர்களுக்குத் தலைமை தாங்கியவர்தான் உதயகுமார்.

பட்டமளிப்பு விழாவில் பலத்த பாதுகாப்புடன் கலந்துகொண்ட கருணாநிதி கிளம்பிச் சென்ற பிறகு, மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர் காவல்துறையினர். அடுத்த நாள் காலை மாணவர் உதயகுமார் பல்கலைக்கழகக் குளத்தில் பிணமாக மிதந்தார். இதனால்,மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அன்றைய எதிர்க்கட்சியான காங்கிரசும் திமுகவைக் கடுமையாக விமர்சித்தது.

இதனால், உதயகுமார் கொலை தொடர்பான ஆதாரங்களை அழிக்கும் வேலையில் திமுக முழுமூச்சாக ஈடுபட்டது. உதயகுமாரின் தந்தை பெருமாள் சாமியும், சகோதரர் மனோகரனும் கருணாநிதி அரசால் மிரட்டப்பட்டனர். போலியாக நீதிமன்றத்தை உருவாக்கி, அங்கு இவர்களை அழைத்துச் சென்று சொன்னபடி பொய் வாக்குமூலம் கொடுக்கிறார்களா? – என்று சோதித்துப் பார்த்தனர். இதனால் உதயகுமாரின் உடலைப் பார்த்த அவரது தந்தையே, ‘இது என் மகனில்லை’ என்று கூறும் நிலைக்கு ஆளானார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்குள் காவல்துறை ஏன் நுழைந்தது என விசாரிக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து விசாரித்த நீதிபதி என்.எஸ்.ராமசாமி ஆணையம், ‘இறந்தது உதயகுமார்தான், ஆனால் அந்த மரணத்துக்கும் காவல்துறை உள்ளே நுழைந்ததற்கும் தொடர்பில்லை’ என்று அறிக்கை தந்தது. இறந்தது உதயகுமார் – என்று நீதிபதிக்குத் தெரிந்தது, அதை ஏன் உதயகுமாரின் தந்தையால் சொல்ல முடியவில்லை? – என்ற கேள்விக்கு விடை காணாமல் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இந்த வழக்கில் யாரும் தண்டிக்கப்படவில்லை.

மாணவர் உதயகுமார் கொலை நடந்து 7 ஆண்டுகளுக்குப் பின்னர், உதயகுமாரின் சகோதரர் மனோகரன் அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு எழுதிய கடிதம்தான் இந்த அத்தனை சம்பவங்களுக்கும் ஒரே சாட்சியாக உள்ளது.

Exit mobile version