சேலம் மாவட்டத்தில், அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அரசு பள்ளி கலையரங்கத்திற்கு, கருணாநிதி பெயர் வைத்தது குறித்து, நியூஸ் ஜெ செய்தி எதிரொலியாக, இரவோடு இரவாக திமுகவினர் பெயர்களை மாற்றியுள்ளனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கலையரங்கம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது.
ஆட்சி மாற்றத்தை அடுத்து கிடப்பில் போடப்பட்ட கட்டுமானப் பணிகள், முதலமைச்சர் ஸ்டாலினின் வருகையை ஒட்டி அவசர அவசரமாக தொடக்கப்பட்டன.
மேலும், அந்த அரங்கத்திற்கு கருணாநிதி பெயர் வைக்கப்பட்டது. இந்த நிலையில், கருணாநிதி பெயர் வைத்ததற்கு அதிமுக சார்பில் எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏ சித்ரா தர்ணாவில் ஈடுபட்டார்.
நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் இது குறித்த செய்தியும் வெளியானது. அதன் எதிரொலியாக திமுகவினர் இரவோடு இரவாக கருணாநிதியின் பெயரை அழித்துள்ளனர்.
மேலும், அங்கு வைக்கப்பட்ட கல்வெட்டில், கலைஞர் அரங்கம் என்ற பெயரும் அகற்றப்பட்டுள்ளது.