தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் என்பது புதிதான ஒன்றல்ல. ஒவ்வொரு வருடமும் ஏதாவது வாரிசு நடிகர்கள் அறிமுகமாகி கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் அதில் எத்தனை பேர் நல்ல நடிகர் என்ற பெயரை முதல் படத்திலேயே எடுத்திருப்பார்கள் என்றால் ரொம்ப ரொம்ப குறைவு தான்.
அதுவரை 60களில் பிறந்தவர்கள் நடிகர் சிவகுமாரையும், 90களில் பிறந்தவர்கள் நடிகர் சூர்யாவையும் தங்கள் கால இளைஞர்களாக அடையாளம் கண்டுக்கொண்ட நிலையில் அவரது குடும்பத்தில் மூன்றாவதாக 2kகளின் இளைஞர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டார் நடிகர் கார்த்தி. 2007ல் இயக்குநர் அமீரின் இயக்கத்தில் பருத்திவீரன் படம் வெளியாகிறது. முதல் படத்திலேயே தமிழக அரசின் “சிறந்த நடிகர்” என்ற விருதை வெல்வதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் பருத்திவீரனாய் கவர்ந்தார் கார்த்தி.
1977ம் ஆண்டு மே25ல் பிறந்த கார்த்தி மெக்கானிக் பொறியியல் படிப்புடன் எம்பிஏ படிப்பையும் முடித்தார். ஆனால் அப்பா சினிமாவில் உச்ச நடிகர் என்பதால் அவருக்குள்ளும் சினிமா ஆசை இருந்தது. நடிகராக அல்ல ஒரு இயக்குநராக ஆசைப்பட்டார் கார்த்தி.
இயக்குநர் மணிரத்தினத்திடம் ஆயுத எழுத்து படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். ஆனால் காலம் அவரை நடிகராக இயக்குநர் அமீர் மூலம் “பருத்தி வீரன்”-ல் அறிமுகப்படுத்தியது. முதல் படம் வெளியானது 2007ல். ஆனால் 2வது படத்தில் மூன்று ஆண்டுகள் கழித்து 2010ல் செல்வராகவன் இயக்கத்தில் “ஆயிரத்தில் ஒருவன்” ஆக வந்தார். படம் அன்றைக்கு சரியாக போகவில்லை. ஆனால் இன்றைக்கு சிறந்த படம் என்று ஊரே தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது.
இடைப்பட்ட 3 ஆண்டுகளுக்கும் சேர்த்து 2010ல் 3 படங்கள் கொடுத்தார். அதில் 2 மெஹா ஹிட் படங்கள். ஒன்று “பையா”. இன்றைக்கும் இளைஞர்களின் ரோல் மாடலாக கார்த்தியை முன்னிறுத்திய படம். அதே சமயம் மற்றொரு படமான “நான் மகான் அல்ல” அவருக்கான பேமிலி ஆடியன்ஸை கொண்டு வந்தது.
2011ல் வெளியான “சிறுத்தை” படம் கார்த்தியின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால் அதன்பிறகு அவருக்கு அப்படியான படங்கள் அமையவில்லை. அடுத்த 3 ஆண்டுகள் நடித்த படங்கள் எல்லாம் தோல்வி.
மீண்டும் 2014ல் மெட்ராஸ் படம் மூலம் மீட்டெழுந்தார். ஆனால் அடுத்ததாக வந்த “கொம்பன்” மீண்டும் கார்த்தியை திரையுலக பயணத்திற்கு திரும்ப வைத்தது. அதன்பிறகு தெலுங்கில் முன்னணி ஹீரோ நாகார்ஜூன் உடன் “தோழா” படம் ஓரளவு வெற்றி. மறுபடியும் “காஷ்மோரா” தோல்வி.
தான் உதவி இயக்குநராக பணியாற்றிய தனது குருவான மணிரத்னம் இயக்கத்தில் “காற்று வெளியிடை” படத்தில் நடித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்த படம் எதிர்பாராத தோல்வியை அவருக்கு கொடுத்தது.
இடையில் நடிகர் சங்கம் தேர்தலில் நின்று பொருளாளராகவும் தேர்வானார் கார்த்தி.
ஆனால் சினிமாவில் அவருக்கான வெற்றி கிட்டாமலே இருந்தது. 2017ல் “தீரன் அதிகாரம் ஒன்று” கார்த்தி நடிப்பில் வெளியானது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
2018ல் பாண்டிராஜ் இயக்கத்தில் மிகச் சிறந்த குடும்ப படமாக கொண்டாடப்பட்ட “கடைக்குட்டி சிங்கம்” படத்தில் நடித்தார் கார்த்தி. ஆனால் மீண்டும் இந்த வருடத்தில் நடித்த “தேவ்” படம் தோல்வி என மாறி மாறி கிடைத்தாலும் சினிமாவில் தன்னை படத்திற்கு படம் வித்தியாசமாக காட்டிக் கொண்டுதான் இருக்கிறார். அதனால் தான் இத்தனை வருடங்களிலும் அவர் தனக்கான ரசிகர்களை இழக்காமல் உள்ளார். ஆனால் அவர் தேர்வு செய்யும் படங்களில் ஏதோ ஒரு இடத்தில் தன் ரசிகர்களுக்கான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறுகிறார். அடுத்ததாக கைதி, தனது அண்ணி ஜோதிகாவுடன் ஒரு படம் என படம் நடிப்பதால் அவர் சினிமாவில் தனக்கான வெற்றியை மீண்டும் பதிவு செய்ய இந்த பிறந்தநாளில் சபதமெடுத்திருப்பார் என நம்பலாம்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் கார்த்தி….!