நீதிமன்ற நடவடிக்கைகளை காலம் தாழ்த்தவே, தமிழக அரசுடன் பேச வேண்டும் என கர்நாடகா கோரிக்கை விடுத்துள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், கர்நாடக அமைச்சர் டிகே சிவக்குமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டு, டி.கே. சிவக்குமார் கடிதம் எழுதியுள்ளதை சுட்டிக்காட்டினார். தமிழ்நாடு மற்றும் காவிரியால், பயன்பெறும் மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல், மத்திய நீர்வளத்துறையிடம், தடுப்பணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, ஒப்புதல் பெறப்பட்டுள்ளதை அமைச்சர் சிவி சண்முகம் சுட்டிக்காட்டியுள்ளார். இது உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 16-ம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளார்.
காவிரி தொடர்பாக நவம்பர் 11-ம் தேதி தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கை தாமதப்படுத்தவும், தமிழக அரசு கடந்த 5-ம் தேதி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து தப்பிப்பதற்காகவே, கர்நாடகா தமிழகத்துடன் பேச விரும்புவதாக தெரிவித்துள்ளார். விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பது, மேகதாது பகுதிகளில் கட்டுமானங்களை அமைப்பதும், நீதிமன்ற அவமதிப்பு என குறிப்பிட்டுள்ள அமைச்சர் சிவி சண்முகம், இத்தகைய நடவடிக்கைகளை கர்நாடகா கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.