மக்களவை தேர்தலையொட்டி கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மஜத இடையில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன்படி மஜதவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவில் மஜத மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்துள்ளன. மஜதவின் குமாரசாமி முதலமைச்சராக உள்ளார். இந்த இரு கட்சிகளுக்கிடையில், கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழல் உருவானநிலையில், மக்களவை தேர்தலில் கூட்டணி தொடருமா என்பது கேள்விக்குறியாக இருந்தது.
இந்நிலையில் இந்த கூட்டணி மக்களவை தேர்தலிலும் நீடிப்பது குறித்து தொடர் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், டெல்லியில் மஜத தலைவர் தேவகவுடாவை அவரது இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில், தொகுதி பங்கீட்டில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 மக்களவை தொகுதிகளில் 10 தொகுதிகள் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.