தேர்தலின்போது வாக்குறுதி அளித்துவிட்டு, மாநகராட்சி அறிவிப்பில் காரைக்குடியை புறக்கணித்து விட்டதாக திமுக மீது பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தற்போது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி 1928ஆம் ஆண்டு நகராட்சி அந்தஸ்து பெற்றது.1988-ல் தேர்வு நிலை நகராட்சியாகவும், 2013-ல் சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. இதனால் காரைக்குடி விரைவில் மாநகராட்சியாக அறிவிக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர். சட்டப்பேரவை தேர்தலின்போது காரைக்குடி உள்பட 8 நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. இந்த நிலையில், சட்டப்பேரவையில் புதிய மாநகராட்சிகள் அறிவிப்பின்போது காரைக்குடியும் மாநகராட்சியாகும் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் திமுக அரசு காரைக்குடியை புறக்கணித்து விட்டதாகவும் பொதுமக்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.