காரைக்காலில் மாங்கனித் திருவிழாவையொட்டி, காரைக்கால் அம்மையாரின் திருக்கல்யாண வைபவம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஆனி மாதம் காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டும் பக்தர்களின்றி மாங்கனி விழா நடத்த ஏற்பாடு நடைபெற்றது. இதன்படி விநாயகர் பூஜையுடன் துவங்கிய விழா மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சிக்கு பின்னர், பரமதத்த செட்டியார் ஆலயத்தை வலம் வந்தார்.
இதையடுத்து காரைக்கால் அம்மையார் என்று அழைக்கப்படும் புனிதவதியாருக்கும் பரமதத்தருக்கும் மங்கள வாத்தியங்கள் முழங்க திருமண சடங்குகள் நடைபெற்று பின்னர் மங்கல நாண் ஏற்றும் நிகழ்ச்சியும் தீபாரதணையும் நடைபெற்றது.
திருக்கல்யாண வைபவத்தில் உபயதாரர்கள் மற்றும் ஆலய நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டனர்.
இதனிடையே, பக்தர்களின் கோரிக்கையை ஏற்ற மாவட்ட நிர்வாகம், திருக்கல்யாணம் வைபவத்திற்கு பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளித்துள்ளது.
விழாவின் நிறைவு நிகழ்ச்சியான மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சி 24ஆம் தேதியும் நடைபெற உள்ளது.