கேரளத்தை விட்டுப் பிரிந்த கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த 64ஆம் ஆண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஆட்சிக்குட்பட்டிருந்த தமிழர்கள் தங்கள் பகுதிகளைத் தமிழகத்துடன் இணைக்கக் கோரித் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். 1947ஆம் ஆண்டுக்குப் பின் இந்தப் போராட்டம் வலுப்பெற்றது. மொழிவழி மாநிலச் சீரமைப்புக்கு ஆய்வு நடைபெற்ற போது தோவாளை, அகத்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றங்கரை, செங்கோட்டை, தேவிக்குளம், பீர்மேடு ஆகிய வட்டங்களைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என வழக்கறிஞர் நேசமணி தலைமையிலான போராட்டக் குழுவினர் வலியுறுத்தினர். இதனிடையே கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகளைத் தமிழகத்துடன் இணைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 14 பேர் கொல்லப்பட்டனர். இடைவிடாத போராட்டத்தாலும் பலர் இன்னுயிர் ஈந்ததாலும் 1956 நவம்பர் 1ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்தது.
அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வின் 63ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நாகர்கோவிலில் உள்ள நேசமணி மணிமண்டபத்தில் அவரது சிலைக்குக் கன்னியாகுமரி ஆட்சியர் பிரசாந்த் வடநேரே மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஆட்சியரைத் தொடர்ந்து கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், அ.தி.மு.க.,தலைமை நிலையப் பேச்சாளரும் திரைப்பட இயக்குநருமான பி.சி.அன்பழகன், சாகித்திய அகாடமி பரிசுபெற்ற எழுத்தாளர் பொன்னீலன், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சாகுல்ஹமீது, மற்றும் தெற்கு எல்லைப் போராட்டத் தியாகி கோ.முத்துக்கருப்பன் ஆகியோர் தெற்கு எல்லையை மீட்கத் தமிழர் நடத்திய போராட்டங்களை நினைவுகூர்ந்தனர்.