சிதம்பரம் அருகே, கன்னித்திருவிழாவில், கன்னிப்பெண்களின் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று, ஆற்றில் கரைத்து வழிபடும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள முட்லூர் கிராமத்தில், கன்னித்திருவிழா 10 நாட்களுக்கு முன் தொடங்கி நடைபெற்று வந்தது. ஒவ்வொருவர் வீட்டிலும் காணும் பொங்கல் பண்டிகை அன்று கல் நட்டு, அதை கன்னியாக நினைத்து, அதற்கு தினமும் பூஜை செய்து வந்தனர்.
ஊரில் உள்ள ஒவ்வொரு தெரு முனையிலும், அலங்கரிக்கப்பட்ட கன்னி சிலையை வைத்து அதற்கு தினமும் வழிபாடு நடத்தி வந்தனர். இதனையடுத்து, கிராமத்தில் உள்ள 11 தெருக்களிலும் 11 கன்னி சிலைகள் அமைக்கப்பட்டன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 10 வது நாளில், அனைவரும் கன்னி சிலைகளை சுமந்து சென்று ஆற்றில் கரைத்து வழிபடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, கன்னி சிலைகளுக்கு பின் ஊர்வலமாக சென்று ஆட்டம் ஆடி, பாட்டு பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இறுதியாக, கன்னி சிலைகளை இளைஞர்கள் எடுத்துச் சென்று அருகில் உள்ள வெள்ளாற்றில் கரைத்தனர்.