இன்று கவியரசர் கண்ணதாசனின் 93வது பிறந்த தினம்

எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான், அதனால் இப்படிதான் வாழவேண்டும் என சொல்லும் தகுதி இருக்கிறது எனக்கு எனக்கூறிய கவியரசர் கண்ணதாசன் 93வது பிறந்தநாள் இன்று.

ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட பாடல்கள், நான்காயிரத்திற்கு மேற்பட்ட கவிதைகள் 20க்கும் மேற்பட்ட நாவல்கள் என அழிக்க முடியாத படைப்புகளை படைத்த மாபெரும் படைப்பாளி சங்க இலக்கியங்களின் செழுமையையும், சொல் வளமையையும் பாமரனுக்கும் புரியும் வண்ணம் செய்தவர் கவியரசர் கண்ணதாசன்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகில் உள்ள சிறுகூடல் பட்டியில் சாத்தப்பனுக்கும் விசாலட்சிக்கும் மகனாக 24 ஜுன் 1927ல் பிறந்தார். சிறுவயதிலிருந்தே எழுத்தின் மீது அதீத ஆர்வம் காராணமாக சிறுசிறு புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தார். கிரகலெட்சுமி என்ற பத்திரிக்கையில் நிலவொளியிலே என்ற தனது முதல் கதை வெளிவந்ததை கண்ட உத்வேகத்தில் தன்னால் சாதிக்க முடியும் என தளராமல் எழுத ஆரம்பித்தார் கண்ணதாசன்.

திரை ஒளி, சண்டமாருதம்,தென்றல் உள்ளிட்ட பத்திரிக்கைகளில் பணியாற்றி எழுத்துலகில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டினார். பத்திரிக்கை துறையில் இருந்த கண்ணதாசனை திரைப்படத்துரைக்கு இழுத்து வந்தது ஜுபிடர் நிறுவனம் தான். அவர்கள் தயாரித்த கள்வனின் காதலி திரைப்படத்திற்கு பாடல் எழுத வாய்ப்பு கொடுத்தவர் கே.ராம்நாத்.

கலங்கா திருமனமே… உன்கனவெல்லாம் நினைவாகும் தினமே … என்ற பாடல்தான் கண்ணதாசனின் முதல் பாடல். அன்று முதல் சுமார் 30 ஆண்டுகள் இவர் பாடலுக்காக ஒட்டுமொத்த திரையுலகமே காத்து கிடந்தது.

அதிலும் நாம் அன்றாடம் கேட்கும் பாடல்கலான ஆறு மனமே ஆறு, அமைதியான நதியினிலே ஓடம், மயக்கமா கலக்கமா போன்ற பாடல்கள் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. எழுத்துலகில் சாதித்ததைப் போல அரசியல் உலகிலும், சினிமா தயாரிப்பிலும் அவரால் வெற்றியை தொடர முடியவில்லை. சொந்தமாக படம் எடுத்தார். அதுவும் நஷ்டத்தில் முடிந்தது.

“பிர்லாவை போல சம்பாதித்தேன், ஊதாரியைப் போல செலவு செய்தேன்” என தன்னிடம் சேமிக்கும் பழக்கம் இல்லை என்பதை ஒரு பத்திரிக்கையில் இப்படி கூறி இருந்தார் கண்ணதாசன்.

தொடக்க காலத்தில் பிரதான அரசியல் கட்சியை ஆதரித்தாலும், எழுத்துலகின் காதல் காரணமாக அரசியலை தவிர்த்து பல நூல்களையும், கவிதைகளையும் எழுதினார். அதில் அர்த்தமுள்ள இந்துமதம் இன்றளவும் போற்றப்படுகிறது. இன்றைக்கும் இந்த பரபரப்பான உலகத்தில் நமக்கு ஆறுதலாக, தாலாட்டாக, உத்வேகமாக இருப்பது கவியரசரின் வரிகள் மட்டுமே.

எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன்நான், அதனால் இப்படித்தான் வாழவேண்டும் எனசொல்லும் தகுதி எனக்கு உண்டு என்பார்.

ஆண்டுகள் பல ஆனாலும், அவரது பாடல் இன்று வரை ஒலிக்க காரணம் அவரது வரியில் உள்ள நேர்மையும் உண்மையும் தான். காலங்கள் பல கடந்தாலும் கண்ணதாசனின் பாடல்கள் மட்டும் காலத்திற்கும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

 

Exit mobile version