மத்தளத்துக்கு இரண்டு பக்கம்தான் அடி, ஆனால் திமுக தென்மாவட்ட நிர்வாகிகளுக்கு திரும்பிய பக்கமெல்லாம் அடி விழுகிறது. உதயநிதி மற்றும் கனிமொழியின் மோதல்தான் அதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. தென்மாவட்ட திமுகவை கைக்குள் வைத்திருக்கும் கனிமொழி இன்னொரு அழகிரியாக உருவாகிக்கொண்டிருப்பாதாக அரசியல் விமர்சகர்கள் சொல்கின்றனர்.
அத்தை பேச்சை கேட்டா மருமகனுக்கு பிடிக்காது … மருமகன் பேச்சை கேட்டா அத்தைக்கு பிடிக்காது.. இந்த இரண்டு பேர்கிட்ட சிக்கிட்டு கட்சி சீரழிஞ்சிட்டு இருக்கு என்று புலம்பிக்கொண்டிருக்கின்றனர் திமுகவின் தென் மாவட்ட நிர்வாகிகள் ! கனிமொழியும் உதயநிதியும் நேரடியாக மோதிக்கொள்ளாமல் நிர்வாகிகளை வைத்து விளையாடிக்கொண்டிருப்பதுதான் அந்த புலம்பலுக்கு காரணம்.
பொதுவாகவே திமுகவிற்கும் தென் மாவட்டங்களுக்கும் ஏழாம் பொறுத்தம்தான்… தலைமைக்கு கட்டுப்படாமல் தனி ராஜ்ஜியத்தை நடத்துவார்கள் திமுகவின் தென்மாவட்ட நிர்வாகிகள். அந்த வகையில் வைகோ உள்ளிட்ட சிலர் திமுகவில் இருந்து தூக்கி எறியப்பட்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் தொண்டர்களை நம்பாமல் தென் மாவட்டங்களை கவனித்துக்கொள்ள தனது மூத்தமகன் அழகிரியை மதுரைக்கு அனுப்பினார் கருணாநிதி. ஆனால் மூத்தமகனே இளைய மகன் ஸ்டாலினுக்கு போட்டியாக வருவார் என அவர் நினைத்து பார்க்கவில்லை. ஸ்டாலினுக்கு கடும் நெருக்கடிகளை கொடுத்து கருணாநிதியை புத்திர சோகத்தில் ஆழ்த்தினார் அழகிரி.
அன்று அழகிரியால் அல்லல்பட்ட ஸ்டாலின், தன் மகனுக்கு அதுமாதிரி சிக்கல் எதுவும் வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். அதனால் கனிமொழியை மாநில அரசியலில் கால் பதிக்க விடாமல் தேசிய அரசியல் நோக்கி வேண்டுமென்ற தள்ளினார். இப்போது அதுவே உதயநிதிக்கு பெரும் தலைவலியாகியுள்ளது.
தூத்துக்குடி எம்.பியாக வலம் வரும் கனிமொழி தென்மாவட்டங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அழகிரி ஸ்டாலினுக்கு ஆட்டம் காட்டியது போல, உதயநிதிக்கு கனிமொழி ஆட்டம் காட்டி வருகிறார். தென்மாவட்ட நிர்வாகிகளில் பெரும்பாலானோர் கனிமொழியின் தலைமையை விரும்புவதாகவே தெரிகிறது. கட்சியிலும் ஆட்சியிலும் ஸ்டாலினின் மருமகன் மற்றும் மகன் உதயநிதியின் தலையீடு அதிகம் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். மேலும் சமூகவலைதளங்களில் அரசியல்விமர்சகர் என்கிற பெயரில் ஸ்டாலின்,உதயநிதிக்கெல்லாம் கொள்கை எதுவும் இல்லை எனவும், கனிமொழிதான் கொள்கை வாரிசு எனவும் கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.இதனால் உடன்பிறப்புகளின் மத்தியில் கனிமொழியின் இமேஜ் உயரும் என எதிர்பார்க்கிறதாம் கனிமொழி தரப்பு.
கனிமொழியின் இந்த காய் நகர்த்தல்களை உதயநிதி தரப்பு உணராமல் இல்லை. உதயநிதி தரப்பும் அதற்கான எதிர்வினைகளை ஆற்றி வருகிறது. தென் மாவட்டத்தில் கனிமொழியெல்லாம் ஒன்றுமே இல்லை என்பதை நிரூபிப்பதறக்காக கனிமொழிக்கு நெருக்கமாக இருந்த சிலரை தன்பக்கம் இழுத்திருக்கிறார் உதயநிதி. குறிப்பாக தூத்துக்குடியில் கனிமொழியின் நிழல் போல உலா வந்து கொண்டிருந்த அமைச்சர் கீதா ஜீவன், இப்போதெல்லாம் வேறு வழியே இல்லை என்றால் மட்டுமே கனிமொழியின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மற்றபடி ஸ்டாலினின் குட்புக்கில் இடம் பிடிப்பதற்க்காக உதயநிதி அணியில் இணைந்துவிட்டார் கீதா ஜீவன். இவரை போலவே முன்பு கனிமொழியின் ஆதரவாளராக இருந்த பலரும் இப்போது உதயநிதி பக்கம் தாவியுள்ளனர். ஆனாலும் கூட தென்மாவட்ட திமுகவில் கனிமொழியின் செல்வாக்கு சரியவே இல்லை.
அந்த வகையில் தூத்துக்குடியில் கனிமொழியை அழைக்காமல் ஆலோசனைக்கூட்டம் நடத்திய உதயநிதிக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்தது கனிமொழி தரப்பு. ஆலோசனைக்கூட்டத்திற்கு நிர்வாகிகள் வராத நிலையில் காலி சேர்களை பார்த்து கத்திவிட்டு போனார் உதயநிதி. கனிமொழிதான் கொள்கைவாதி என்கிற பேச்சை சகித்துக்கொள்ள முடியாத உதயநிதி, சமீபத்தில் சனாதனம் பற்றி பேசத்தெரியாமல் பேசி, பெரும் சிக்கலுக்குள் சிக்கினார் . தன்னை, கனிமொழியை விட பெரிய கொள்கைவாதி போல காட்டிக்கொள்ளத்தான் உதயநிதி அப்படி பேசினார் என்கிறார்கள் உள்விவகாரங்களை உணர்ந்தவர்கள். உதயநிதி இப்படி சிக்கிக்கொண்டதை கனிமொழி தரப்பு உள்ளுக்குள் ரசிப்பதாகவே சொல்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
இத்தகைய தொடர் மோதல்களால் ஸ்டாலினே இப்போது கனிமொழியை ஓரம் கட்டத்தொடங்கியுள்ளார்.சமீபத்தில் ஸ்டாலின் அவரது குடும்பத்தில் உள்ள பெண்களை பற்றி புகழ்ந்து பேசும் போது அவரது தாய், மனைவி, மகள் பற்றியெல்லாம் பேசினார். ஆனால் அரசியலில் தனக்கு இதுவரை உறுதுணையாக இருந்த தங்கை கனிமொழி பற்றி பேசவே இல்லை. காரணம் கனிமொழி அழகிரியாக உருமாருகிறார் என்பதை ஸ்டாலின் உணர்ந்திருக்கிறார். எதிர்காலத்தில் தனது மகனுக்கு போட்டியாக கனிமொழி இருந்துவிடக்கூடாது என நொந்து கொண்டிருக்கிறார் என்கிறார்கள் திமுகவிற்கு நெருக்கமான வட்டாரத்தில் வலம் வரும் அரசியல் விமர்சகர்கள்.
Discussion about this post