நடிகர் சுஷாந்த் சிங் நேற்று முன்தினம் மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணம் பாலிவுட் ரசிகர்களை மட்டுமன்றி, இந்திய திரை ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கடந்த ஆறு மாதங்களாகவே சுஷாந்த் சிங் மனஅழுத்தத்தில் இருந்ததாகவும், அதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகை கங்கனா இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சுஷாந்தின் இறப்பு தொடர்பாக பல்வேறு கருத்துக்களை அவர் பகிர்ந்துள்ளார்.
பலவீனமான மனது கொண்டவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவதாகவும், அதன் காரணமாக தற்கொலை செய்துகொள்வதாக கங்கனா குறிப்பிட்டுள்ளார். ஆனால், Stanford பல்கலைக்கழகத்தில் ஸ்காலர்ஷிப் பெற்றவரும், பொறியியல் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றவருமான சுஷாந்த் சிங் எப்படி பலவீனமான மனது கொண்டவராக இருக்க முடியுமென, கங்கனா ரனாவத் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தனது திரைப்படங்களை பார்க்கும்படி சமூக வலைதளங்களில் சுஷாந்த் கெஞ்சியதாகவும், திரையுலகில் தனக்கு உதவ godfather யாருமில்லை என அவர் தெரிவித்ததாகவும் கங்கனா கூறியுள்ளார். திரையுலகில் இருந்து, தான் வெளியேற்றப்படுவேன் என சுஷாந்த் அச்சம் தெரிவித்ததையும், பாலிவுட் தன்னை புறக்கணிப்பதாக பல பேட்டிகளில் சுஷாந்த் தெரிவித்ததையும் கங்கனா சுட்டிக்காட்டியுள்ளார்.
சுஷாந்த் நடித்த Kai Po Che, MS Dhoni, Kedarnath, Chhichhore உள்ளிட்ட எந்த படத்திற்கும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனவும், ஆனால் Gully Boy போன்ற மோசமான திரைப்படங்களுக்கு அனைத்து விருதுகளும் கிடைப்பதாகவும் கங்கனா குற்றம்சாட்டியுள்ளார்.
சுஷாந்தின் நடித்த Chhichhore, சிறந்த இயக்குனர் எடுத்து மிக சிறந்த திரைப்படம் என குறிப்பிட்ட கங்கனா, ஆனால் அந்த படத்திற்கும் எந்த பாராட்டும் கிடைக்கவில்லை என வருத்தம் தெரிவித்தார்.
அதேபோல சில நபர்கள் ஆறுதல் கூறுவது போல பேசி தற்கொலை எண்ணத்தை விதைப்பதாக குற்றம் சாட்டிய அவர், அத்தகைய நபர்களால்தான் சுஷாந்த் சிங் தவறான முடிவை எடுத்து விட்டதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், பாலிவுட்டில் வாரிசு நடிகர்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தரப்படுவது குறித்தும் பேசிய கங்கனா ரனாவத், இப்போது கூறுங்கள் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
கங்கனாவின் இதே குற்றச்சாட்டைகளை பல்வேறு திரை பிரபலங்களும் தெரிவித்து வருகின்றனர். பாலிவுட்டில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் குறித்து பலரும் தற்போது விவாதிக்க தொடங்கியுள்ளனர். “பாலிவுட் மாஃபியா” என்ற வார்த்தையும் பிரபலமடைந்து வருகிறது.
இதனிடையே, சுஷாந்த் தொழில் போட்டி காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என, மகாராஷ்டிர அமைச்சர் அணில் தேஷ்முக் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதாக மருத்துவ அறிக்கை கூறுவதாகவும், அதேவேளையில் தொழில் போட்டி காரணமாக சுஷாந்த் மன அழுத்தத்தில் இருந்ததாக ஊடகங்கள் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே அந்த கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்துவார்கள் என மகாராஷ்ட்ரா அமைச்சர் தெரிவித்துள்ளார்.