நீலவான நிற பட்டாடையில் காட்சியளித்த சுவாமி அத்திவரதரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று தரிசித்தனர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் திருக்குளத்திலிருந்து 40 ஆண்டுகளுக்குப் பின் வெளியில் எடுக்கப்பட்ட அத்திவரதர், 6-வது நாளாக பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இதையொட்டி அத்தி வரதருக்கு தினமும் சிறப்பு அர்ச்சனைகள் மற்றும் தீபாராதனைகள் காட்டப்பட்டன.
6-வது நாளான இன்று நீலவான பட்டாடையில், பல வித மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அத்தி வரதர் சயனகோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 5 மணி முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர் .
நேற்று மட்டும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிமுகவினர் அத்தி வரதரை தரிசித்தனர்.