காஞ்சிபுரம், மானாம்பதியில் குண்டு வெடித்து 2 பேர் பலியான வழக்கில், கண்டெடுக்கப்பட்டுள்ள ராக்கெட் லாஞ்சரை சென்னை கொண்டு வந்து ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், மானம்பாதி கங்கையம்மன் கோயில் குளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்ததில் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்த நிலையில் 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் அப்பகுதியில் இரும்புக் கடை நடத்தி வரும் ரபிஃக்கான் என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து சம்பவ இடத்தை ஆய்வு செய்த போது, மற்றொரு மர்ம பொருள் கண்டெடுக்கப்பட்டது. அது ராக்கெட் லாஞ்சர் என்பதை உறுதி செய்த வெடிகுண்டு நிபுணர்கள், அதனை சென்னைக்கு கொண்டு வந்து ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ராக்கெட் லாஞ்சர் குண்டு ஒப்படைக்கப்பட்டு, பின்னர் சென்னைக்கு கொண்டு வரப்படும்.