ஒரே ஒரு குருக்கள் வறார் வழிவிடுங்கோ – சிக்கலில் சிநேகன்!

மய்யத்திலிருந்து புறப்பட்ட வண்டியொன்று வழிதெரியாமல் தட்டுத்தடுமாறி கொண்டிருக்கிறது. கோட்டையை நோக்கி செல்கிறோம் என்று சொல்லப்பட்ட அந்த வண்டியின் டயர்களும், ஸ்பேர் பார்ட்ஸ்களும் ஒவ்வொன்றாக கழன்று ஓட தொடங்கியுள்ளன. ஆனால், வண்டியின் டிரைவர் மட்டும், `பெட்ரோலே இல்லனாலும் வண்டி ஓட்டுவேன்’ என விடாப்பிடியாக ஸ்டேரிங்கை மய்யமாக ஏந்திக்கொண்டு அடம்பிடிக்கிறார். யாருமே இல்லாத கடையில் அமர்ந்துகொண்டு டீ ஆற்றிக்கொண்டிருக்கும் கமலை நோக்கி, `நான் வேணும்னா 10 கெட்டப் போட்டுக்கவா தலீவரே!’ என அப்பாவியாக கேட்கிறார் சிநேகன்.

நேர்மைடா, நீதிடா, நியாயம்டா என்றவரிடம் நான் கெளம்புறேன்டா என முதன்முதலில் டாட்டா காட்டியவர் மகேந்திரன். வெறும் வெப்சைட் டிசைன் செய்யும் குழுவான சங்கையா சொல்யூசன்ஸ் நிறுவனத்தை வைத்துக்கொண்டு ஆட்சியை பிடித்து விடலாம் என்ற நினைப்பதெல்லாம் ஓவர் கான்பிடன் பாஸ்!

`கட்சியில் யார் கருத்தையும் கேட்காமல் சர்வாதிகாரியாக செயல்படுகிறார் கமல்’ என்று கூறி பொட்டியை எடுத்துக்கொண்டு நடையை கட்டினார் சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ். `நானும் வரேன்’ என்று ஒலித்த அந்த குரலை திரும்பி பார்த்தால் நம்ம இட ஒதுக்கீடு புகழ் பத்ம பிரியா.  `நம் கட்சி என்று கூறிவந்த கமல், இன்றைக்கு என் கட்சி என அதிகார தொனியுடன் பேசுகிறார்’ என குற்றம்சாட்டிவிட்டு கிளம்பிவிட்டார் பொதுச் செயலாளர் முருகானந்தம். அவருடன் தொழில் முனைவோர் அணியின் மாநில செயலாளரான வீரசக்தி உள்பட முக்கிய பொறுப்புகளில் இருந்த 15 பேர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

கமலுக்கு ஆளுமைத்திறன் இல்லை என்பதை தொகுதி ஒதுக்கீடு வியூகங்களே தெளிந்த நீரோடைப்போல விளக்கிவிட்டனர். சங்கையா சொல்யூசன்ஸ் கைகாட்டிய இடத்தில் கையெழுத்து போட்டு சீட்டு ஒதுக்கிதருபவர் ஒருபோதும் தேர்ந்த அரசியல்வாதியாக முடியாது. கட்சியோடு ஒன்றாமல், கட்சிக்காரர்களோடு கலந்தாலோசிக்காமல், தாமரை இலையில் தண்ணீர் போல ஒட்டாமலே ஏசி ரூமில் அரசியல் செய்வது ஒருபோதும் பலன்தரப்போவதில்லை. காரணம் தமிழகத்தின் மண் என்பது பல்வேறு களப்போராட்டங்களாலும், காயங்களாலும், வலிகளாலும், குருதியாலும் நனைந்தது.

இங்கு ஏசிக்காற்றில் வாழ்ந்துகொண்டு, ஹெலிகாப்டரில் பறந்துகொண்டு, ட்விட்டரில் தட்டிக்கொண்டு இருப்பவர்களால் ஒருபோதும் மக்கள் பிரதிநிதியாக முடியாது என்பதை முகத்தில் அறைவது போல சொல்லிவிட்டன தேர்தல் முடிவுகள்.

கட்சியிலிருப்பவர்களும் மக்கள் தானே. அதனால்தான் தேர்தலில் மக்கள் கொடுத்த தீர்ப்பை உறுதி செய்யும் வண்ணம் கட்சியிலிருந்து கிளம்பிவிட்டனர். இன்று மட்டும் 2000 கிளை செயற்குழு உறுப்பினர்கள் உள்பட 2,200 பேரும் உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாக முருகானந்தம் குழுவினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே ஒரு குருக்கள் வறார் வழிவிடுங்கோ என்று கூவிக்கொண்டு முன்னே செல்லும் சிநேகனைப் பார்த்தால் தான் பாவமாக இருக்கிறது என்று புலம்புகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Exit mobile version