திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையில் பல்வேறு வகையான கள்ளிச் செடிகளை கொண்டு அமைக்கப்பட்ட “கள்ளிப்பூங்கா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையில், தமிழகத்தில் புது மாதிரியாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மூன்று லட்சம் ரூபாய் செலவில், “கள்ளிப்பூங்கா’ அமைக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை சார்பில் பராமரிக்கப்படும் அணையில் பூங்கா, நீரூற்று, வண்ண மின் விளக்குகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இங்கு “பாறை பூங்கா’ பகுதியில், கள்ளிச் செடி வகைகள் மட்டுமே உள்ள “கள்ளி பூங்கா’ அமைக்கப்பட்டுள்ளது.
எட்டாயிரம் சதுர அடி பரப்பளவில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள 25க்கும் மேற்பட்ட வகையான கள்ளிச் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
தாமரை, பந்து, லில்லி போன்ற பல்வேறு வடிவங்களிலும், பல்வேறு வண்ணங்களிலும் பூக்கும் கள்ளிச் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. காட்டிலேடன், நாகதாளி, பர்குரி, யூகா, யுபோர்பியா, நூலைன், முள் இல்லாதது போன்ற பல்வேறு வகை கள்ளிச் செடிகள் இந்த அணையை அலங்கரிக்கின்றன..
ரிவால்யூட், ஜூட், அடீனியம் கிராபில்ட், யுபோபியா மல்டி ஹைபிரிட், பிச்சிபோடியம் கிராஸ் போன்ற சிறப்பு வகை கள்ளிச்செடிகளையும் அங்கே காண முடிகிறது.
இயற்கையாக நமது பகுதியில் இருக்கும் கள்ளிச் செடிகளும் ஏற்கனவே இங்குள்ளன. கள்ளிச்செடிகளை பார்ப்பதற்காகவே அங்கே சுற்றுலா பயணிகள் குவிகிறார்கள்…