கல்கி ஆசிரமத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் 44 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் வரதைய பாளையத்தைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கல்கி ஆசிரமத்தில் வருமானத்துக்கு முறையாகக் கணக்குக் காட்டுவதில்லை எனத் தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, ஆசிரமத்திற்கு சொந்தமான இடங்களில், கடந்த 3 நாட்களாக வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில், 40 இடங்களில் நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராத 18 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்களும், 26 கோடி ரூபாய் மதிப்பிலான 88 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஆசிரமத்திற்கு சொந்தமான பல்வேறு இடங்களில் இருந்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான, கணக்கில் வராத சொத்துக்களும் கண்டுபிடிக்கப்பட்டது. இது மட்டுமல்லாது, கல்கி பகவானின் மகன் பல்வேறு வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.