காலிமனைகளை உரிமையாளர்கள் தூய்மையாக வைத்து கொள்ள அறிவுறுத்தல்: சேலம் மாநகராட்சி எச்சரிக்கை

சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள காலி மனைகளை 1 வார காலத்திற்குள் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் சுத்தம் செய்ய வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில், அந்த இடங்களை மாநகராட்சியே சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகராட்சி பகுதிகளில் தொற்று நோய் தடுப்பு பணிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் ஆய்வு மேற்கொள்ள, 750 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாநகர பகுதிகளில் உள்ள காலி வீட்டு மனைகளில் குப்பை மற்றும் டயர் போன்ற தேவையற்ற பொருட்களால் மழை நீர் தேங்கி தொற்று நோய் ஏற்படுவதாகவும், இதனால் காலி மனைகளின் உரிமையாளர்கள் தேவையற்ற பொருட்களை அகற்றி நிலத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் இதனை பொருட்படுத்தமால் உள்ள உரிமையாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் காலி வீட்டு மனைகளின் உரிமையாளர் தேங்கியிருக்ககூடிய குப்பைகள், முட்புதர்களை 1 வார காலத்திற்குள் அகற்ற வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் இட உரிமையாளர்களுக்கு உரிய அபராதம் விதிப்பதோடு அந்த இடங்களை மாநகராட்சி நிர்வாகமே சுத்தப்படுத்தி பூங்கா, சமுதாயக் கூடம் போன்றவைகள் அமைத்து பொதுமக்கள பயன்பாட்டிற்கு விடப்படும் என அறிவித்துள்ளார். மேலும், சம்மந்தப்பட்ட காலிமனை உரிமையாளர்கள் உடனடியாக தங்களுக்கு சொந்தமான இடங்களை சுத்தப்படுத்தி மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார் .

Exit mobile version