தன்னை காப்பாற்றிக்கொள்ள தயாநிதியை காவு கொடுக்கிறாரா கலாநிதி ?

பிரச்சனை என்று வந்தால், கூடப் பிறந்தவர்களையே கை காட்டி, இவர் யார் என்றே தெரியாது என்று சொல்வதை திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால், அதை தற்போது சிபிஐ நீதிமன்றம் நிஜத்தில் கண்டிருக்கிறது. பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில்தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்றைய தினம் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டது. இதில் ஆஜரான 7-வது குற்றவாளியான கலாநிதி மாறன், மிகவும் கொந்தளிப்போடு பேசியுள்ளார். தான் 1994 ம் ஆண்டு முதல் தொலைக்காட்சி நடத்தி வருவதாகவும், தயாநிதி மாறன், 2004 முதல் 2007 வரைதான் மத்திய அமைச்சராக இருந்தார் என்றும் பொரிந்து தள்ளியுள்ளார். ஏதோ, தயாநிதி மாறனின் அந்த மூன்று வருட காலகட்டத்தில்தான் தான் தொலைக்காட்சி நடத்துவது போல கூறுகின்றனர் என்றும் கோபத்தோடு கொந்தளித்துள்ளார்.

இதோடு நிறுத்தாமல், தயாநிதி மாறன் மீது உள்ள குற்றச்சாட்டு வேறு, தம் மீது உள்ள குற்றச்சாட்டு வேறு என்றும், தன்னையும், அவர்களையும் சம்மந்தப்படுத்தாதீர்கள் என்று உறுதிபட கூறியுள்ளார். தாம் வேறு என்றும், தயாநிதி மாறன் வேறு என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதன் உச்ச கட்டமாக, தன்னை அவர்களோடு ஒப்பிடாதீர்கள், தயாநிதி மாறன் தயவிலோ, அவரை நம்பியோ தான் தொலைக்காட்சி தொடங்கவில்லை என்றும் ஆவேசமாக கூறியுள்ளார்.

இதை பார்த்த பிறகு, மாறன் சகோதரர்கள் இடையே பிளவு ஏற்பட்டுள்ளதோ என்று அனைவரும் எண்ணத் தொடங்கிவிட்டனர். அமைச்சர் பதவியை பயன்படுத்தி, தயாநிதி மாறன் கொடுத்த சலுகைகளை சொகுசாகப் பயன்படுத்திவிட்டு, பிரச்சனை என்று வந்த உடன், அவர் யார் என்றே தெரியாது என்ற பாணியில் கலாநிதி மாறன் பேசியுள்ளதாக நீதிமன்ற வட்டாரத்தில் பேசப்படுகிறது.

சிக்கல் என்று வந்தவுடன் ரத்த சொந்தத்தையே இல்லை என்று கூறும் அளவுக்கு கலாநிதி மாறன் சென்றுள்ளதால் அடுத்தடுத்த நாட்களில் மேலும் பல ரகசியங்கள் அம்பலத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Exit mobile version