எதையோ மறைக்க என்னை தலைப்புச் செய்தியாக்குகின்றனர் என நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் ட்வீட் செய்துள்ளார்.
பிரபல நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் மீது குடிபோதையில் கார் ஓட்டியது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது ஆகிய குற்றங்களுக்காக சென்னை அபிராமபுரம் போலீஸார் ரூ. 3500 அபராதம் விதித்ததோடு போலீஸாரே பத்திரமாக காரை காயத்ரி ரகுராமின் வீட்டில் சேர்த்ததாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த தகவல் பொய்யானது எனக் கூறி சரமாரியாக காயத்ரி ரகுராம் ட்வீட் செய்து வருகிறார். ஊடககங்கள் தொடர்ச்சியாக தன்னை டார்கெட் செய்கின்றன என்றும், ஏதோ சில விஷயங்களை மறைப்பதற்காக தன்னை தலைப்புச் செய்தியாக்குகின்றனர் என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து உடன் நடித்த நடிகையை விட்டில் விடுவதற்காக காரில் சென்றபோது போலீஸார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர் என்றும், செய்திகளில் கூறியதுபோல் எந்த சம்பவமும் நடைபெறவில்லை மாறாக சோதனை செய்த போலீஸார் அவருடைய ரசிகர் என்பதால் காயத்ரியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார். குடிபோதையில் இருந்த தொலைக்காட்சி நிருபர்தான் இவ்வாறு பொய்ச் செய்தியை வெளியிட்டுள்ளார் எனக் கூறும் காயத்ரி ரகுராம், நான் போதையில் இருந்தால் என்னை கார் ஓட்டுவதற்கு போலீஸார் எப்படி என்னை அனுமதித்திருப்பார்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். காயத்ரி ரகுராமின் ட்விட்டுக்கு பதிலளித்துள்ள நடிகை காஜல் பசுபதி, நான் தானே கூட இருந்தேன் இது என்ன புதுகதையா இருக்கே, கவலைப்படாதீங்க என காயத்ரி ரகுராமுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.