கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவின் 2ஆம் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறுகிறது.
கச்சத்தீவில் இந்திய- இலங்கை பக்தர்கள் கொண்டாடும் புனித அந்தோணியார் திருவிழா நேற்று மாலை தொடங்கியது. 285 ஏக்கரிலான கச்சத்தீவு, ராமேசுவரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் பாக்ஜலசந்தி கடற்பரப்பில் அமைந்துள்ளது. புனித அந்தோணியார் திருவிழாவுக்காக 80 படகுகளில் 2 ஆயிரத்து 453 தமிழக பக்தர்கள் நேற்று ராமேசுவரத்திலிருந்து புறப்பட்டு கச்சத்தீவு சென்றனர்.
யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் அந்தோணியார் கச்சத்தீவு ஆலயத்தின் கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். நெடுந்தீவு பங்குத்தந்தை மற்றும் ராமேஸ்வரம் பங்குத் தந்தை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இன்று காலை சிறப்பு திருப்பலி பூஜையும், அந்தோணியார் தேர்பவனியும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு அதிகளவில் இலங்கையிலிருந்து சிங்கள பக்தர்கள் கலந்து கொள்வதால் சிங்கள மொழியில் முதன்முறையாக திருப்பலி நடத்தப்படுகிறது. சிங்கள திருப்பலியை காலி மறைமாவட்ட ஆயர் ரேமண்ட் விக்ரமசிங்கே நடத்துகிறார். மாலை கொடியிறக்கம் நடைபெற்று விழா முடிவடையும்.