மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட தேச துரோக வழக்கு ஜூலை 5ம் தேதி தீர்ப்பு

மதிமுக பொது செயலாளர் வைகோ மீது பதிவு செய்யப்பட்ட தேச துரோக வழக்கு மீதான தீர்ப்பு, ஜூலை 5ஆம் தேதி வழங்கப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ராணி சீதை மன்றத்தில் ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, இந்திய அரசுக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இருந்ததால், தேச துரோகம் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியது ஆகிய பிரிவுகளில், ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி சாந்தி முன்பு நடைபெற்று வந்தது. வழக்கின் ஒவ்வொரு விசாரணைக்கும் வைகோ நேரில் ஆஜராகி வருகிறார். குற்றச்சாட்டு பதிவு, அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட 9 சாட்சிகளிடம் சாட்சி விசாரணை, சாட்சியத்தின் அடிப்படையில் வைகோவிடம் விளக்கம், குறுக்கு விசாரணை, இரு தரப்பு வாதங்கள், எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்தல் என அனைத்து விசாரணை நடைமுறைகளும் முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாகவும், ஜூலை 5ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

Exit mobile version