ப.சிதம்பரத்தின் தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனுவில் குறைகள் இருப்பதால், அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மறுத்துள்ளார்.
கடந்த 2007-ம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனத்திற்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி வருகின்றன. இந்த வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், முன் ஜாமீன் அளிக்க மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்தது. ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்து ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில், ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவிகள் குறைகள் இருப்பதால், அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மறுத்துள்ளார். மேலும், கைது நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்கவும் நீதிபதி மறுத்துவிட்டார். இதனையடுத்து, ப.சிதம்பரம் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.