சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தகில் ரமணியை மேகாலய உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவிகளுக்குத் தகுதியானவர்களின் பெயர்களை, உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் 5பேர் அடங்கிய கொலீஜியம் மத்தியச் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்துக்குப் பரிந்துரைக்கும். இதையடுத்து அந்த அமைச்சகத்தால் அனுப்பப்படும் பட்டியலுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து நியமனம் நடைபெறும். சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமணியை மேகாலய உயர்நீதிமன்றத்துக்கு மாற்றவும், அதற்குப் பதில் மேகாலய உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலைச் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றவும் கொலீஜியம் பரிந்துரைத்தது. இதையடுத்துத் தன்னை இடமாற்றம் செய்யும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கொலீஜியத்துக்கு நீதிபதி தஹில்ரமணி கோரிக்கை விடுத்திருந்தார். இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த கொலீஜியம், நீதிபதி தஹில்ரமணியை மேகாலய உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற மீண்டும் பரிந்துரைத்துள்ளது.