இந்தியாவில் வேலைவாய்ப்புகள் படிப்படியாக அதிகரிக்கும்!!

இந்தியாவில் வேலையின்மை விகிதம் படிப்படியாக குறைந்து வருவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதனால், நாட்டின் பொருளாதாரம் விரைவில் வளர்ச்சியை எட்டும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவலின் தொடக்கத்தில், உலகம் முழுவதும் வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. அத்துடன், பல கோடி பேர் தங்களது வேலைகளை இழந்தனர். குறிப்பாக, இந்தியாவில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வேலையின்மை விகிதம் உச்சத்தை அடைந்தது. மார்ச் மாதத்தில் வெறும் 8.75 சதவீதமாக இருந்த வேலையின்மை, ஏப்ரல் மாதத்தில் அதிரடியாக 23.5 சதவீதமாக உயர்ந்தது. மே மாத தொடக்கத்தில் அது மேலும் அதிகரித்து, 27.1 சதவீதம் வேலை இல்லாத சூழல் ஏற்பட்டது.

இதனால், இந்தியாவில் கிட்டத்தட்ட நான்கில் ஒருவருக்கு வேலை இல்லை என்ற நிலை உருவானது. இந்திய மக்கள் பலரிடையே எதிர்காலம் குறித்த அச்சமும் ஏற்பட்டது. இந்நிலையில், ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் கொண்டுவரப்பட்டன. தொழிற்சாலைகள் உள்ளிட்டவை மீண்டும் செயல்படத்தொடங்கின.

இதன் காரணமாக, இந்தியாவில் தற்போது வேலைவாய்ப்புகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது தொடர்பான ஆய்வை, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் மேற்கொண்டது. அதில், ஜூன் முதல் வாரத்தில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 17.5 சதவீதமாகவும், இரண்டாவது வாரத்தில் 11.6 சதவீதமாகவும் குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, இந்தியாவின் வேலையின்மை விகிதம் 8.5 சதவீதமாக உள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கடந்த மாதம் 27.1 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம், தற்போது 10 சதவீதத்திற்கும் கீழ் குறைந்திரப்பது நல்ல முன்னேற்றமாக கருதப்படுகிறது. கொரோனா ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்னால் நாட்டின் வேலையின்மை விகிதம் 8.7 சதவீதமாக இருந்தது. கிட்டத்தட்ட அதே நிலை தற்போது எட்டப்பட்டுள்ளது.

ஊரடங்கின் தளர்வு காரணமாக பல பெருநகரங்களிலும், சிறு நகரங்களிலும் தொழில்கள் படிப்படியாக அதிகரித்து வருவதால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும், அடுத்த சில மாதங்களில் வேலைவாய்ப்பு மேலும் அதிகரிக்கும் எனவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்க, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் பெருமளவில் உதவி உள்ளது.

இது குறித்து பேசிய இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தலைமை செயல் அதிகாரி மகேஷ் வியாஸ், கடந்த வாரம் கிராமப்புறங்களில் மட்டும் வேலையின்மை விகிதம் 7.26 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவித்தார். அத்துடன், மே மாதம் ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் மூலம் 3 கோடியே 30 லட்சம் குடும்பங்கள் பயனடைந்ததாகவும், இது கடந்தாண்டை காட்டிலும் 50% அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் வேலைவாய்ப்புகள் படிப்படியாக அதிகரித்து வருவது அனைவரிடமும் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால், இந்திய பொருளாதாரம் விரைவில் சரிவிலிருந்து மீண்டெழும் என பொருளாதார நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Exit mobile version