ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி வெற்றி

சாதி மத இன வேறுபாடின்றி அனைவரின் நலனுக்கும் பாடுபடப்போவதாக ஜார்க்கண்டில் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கப் போகும் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியுள்ளது. பாஜக 28 இடங்களைப் பெற்று ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. முதலமைச்சர் ரகுவர் தாஸ் ஜாம்சேட்பூர் கிழக்குத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் சரயூராயிடம் தோல்வியடைந்தார். காங்கிரஸ் கூட்டணியில் அதிக இடங்களைப் பெற்றுள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் ஹேமந்த் சோரன், முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். அவர் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளார். தங்கள் கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து ராஞ்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜார்க்கண்ட் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளதாகவும், சாதி மத இன வேறுபாடின்றி அனைவரின் நலனுக்கும் பாடுபடப்போவதாகவும் ஹேமந்த் சோரன் தெரிவித்தார்.  

Exit mobile version