தமிழக அரசியலின் தனிப்பெரும் தலைவி, இதயதெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 1991ஆம் ஆண்டில் முதன் முதலாக முதலமைச்சர் பதவி ஏற்ற தினம் இன்று. இந்த நன்னாளில் அம்மா அவர்களின் முதல்வர் பதவியேற்ற வரலாற்றை ஒரு சிறப்புத் தொகுப்பின் வாயிலாக நினைவு கூர்வோம்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆட்சியில் 11 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக மட்டுமே இருந்த திமுக, எம்.ஜி.ஆர். அவர்களின் இறப்பால் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தைப் பயன்படுத்தி 1989ல்தான் மீண்டும் ஆட்சியைப் பிடித்து இருந்தது. அதிமுகவை அடியோடு அழிக்க திமுக திட்டம் தீட்டிவந்தது. இந்நிலையில்தான் 1991ல் தேர்தலில் அம்மா அவர்களின் தலைமையில் களம் கண்டது அதிமுக.
1989ஆம் ஆண்டில் முதன் முதலாக பேரவை உறுப்பினரான போதே, தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் என்ற சிறப்பைப் பெற்றவர் அம்மா அவர்கள். தனது வலிமையை 1991 தேர்தலிலும் அவர் வெளிப்படுத்தினார். அந்தப் பேரவைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை அதிமுக பெற்றது. 225 தொகுதிகள் இரட்டை இலைக் கூட்டணியின் வசமாக, எதிர்த்து நின்ற திமுக கூட்டணியோ 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது, அதில் திமுக வென்ற இடங்கள் வெறும் இரண்டுதான்.
இதன் மூலம் தமிழகத்தின் வரலாற்றில் மிக இளம் வயதில் முதல்வரானவர் என்ற சாதனையை அம்மா அவர்கள் நிகழ்த்தினார். 1991ஆம் ஆண்டில் தமிழகத்தின் முதல்வராகும் போது அம்மா அவர்களின் வயது 43 ஆண்டு 4 மாதம்தான். இதன் மூலம் முன்னர் மு.கருணாநிதி 44 ஆண்டு 8 மாதம் என்ற வயதில் முதல்வராகி செய்த சாதனையை அம்மா அவர்கள் முறியடித்தார். மேலும் அந்தப் பதவியேற்பின் மூலம் தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதல்வர் என்ற சிறப்பையும் அம்மா அவர்கள் பெற்றார்.
தமிழக வரலாற்றில் மிக அதிகபட்சமாக 6 முறை முதல்வராகப் பதவி ஏற்ற ஒரே தலைவரும் அம்மா அவர்கள்தான். 2006ஆம் ஆண்டில் கருணாநிதி முதல்வரானபோது, தமிழகத்தில் ஒருவர் 5ஆவது முறை முதல்வரானதே சாதனையாக இருந்தது. அதை 2016ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி அன்று 6ஆவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றதன் மூலம் அம்மா அவர்கள் முறியடித்தார். மேலும் அந்தப் பதவியேற்பின் போதே, தமிழகத்தில் தொடர்ந்து இரண்டு முறைகள் தொடர்ந்து ஆட்சியைக் கைப்பற்றிய ஒரே பெண் முதல்வர் என்ற சாதனையையும் அவர் தன் வசமாக்கினார்.
கடந்த 2016ஆம் ஆண்டில் அம்மா அவர்கள் மறைந்தபோது தமிழகத்தில் மிக அதிக காலம் முதல்வராக இருந்த பெண் என்ற சாதனை அவரிடம் இருந்தது. அவர் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்திருந்தால் இந்தியாவிலேயே மிக அதிக நாட்கள் முதல்வராக இருந்த பெண் என்ற சாதனையும் அவரது மணி மகுடத்தில் மற்றொரு மாணிக்கக் கல்லாக மிளிர்ந்திருக்கும், அதற்கு முன்பாகவே அந்த சாதனை மங்கையைக் காலம் காவு கொண்டது தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே பேரிழப்புதான்.