வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கர் குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு வெளியுறவுத்துறை செயலாளர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற ஜெய்சங்கர், யாரும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென வெளியுறவு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். வெளியுறவு கொள்கைகளில் கைத்தேர்ந்த ஒருவரை அத்துறையின் அமைச்சராக நியமித்த பிரதமர் நரேந்திர மோடியின் செயலை பலரும் பாரட்டினர். இதனிடையே வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்று இருக்கும் ஜெய்சங்கர், இன்னும் 6 மாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும். எனவே, குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்கு ஜெய்சங்கர் தேர்வு செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அமித் ஷா, ஸ்மிருதி இரானி ஆகியோர் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து குஜராத்தில் 2 மாநிலங்களவை இடங்கள் காலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.