புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி தலைவர்கள் ட்விட்டரில் வாழ்த்து!

மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடியும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ஜெயலலிதாவின் பிறந்தநாளில் அவரை நினைவுக்கூறுவதாகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து அயராது உழைத்தவர் ஜெயலலிதா எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.  பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் முக்கிய பங்காற்றியவர் ஜெயலலிதா எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நவீன தமிழகத்தை வளர்த்தெடுத்த அன்னையாகவும், ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு அம்மாவாகவும் இருத்து எங்களை ஆளாக்கிய அம்மாவின் 73-வது பிறந்தநாளில் அவர்களை போற்றி வணங்குகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், கல்விக்கு கணினி, கழனிக்கு காவிரி, உலைக்கு அரிசி, உயிர்காக்க காப்பீடு, உயர்வுக்கு ஆலை என அனைத்தும் தந்து, ஈடில்லா மாநிலமாய் தமிழகத்தை உயர்த்திய தன்னிகரில்லாத் தலைவி என புகழாரம் சூட்டியுள்ளார். தவப்பெரும் புதல்வி எதிரிகளின் சிம்மசொப்பனம், எட்டரைகோடி மக்களின் ஏந்தல் புரட்சித்தலைவி அம்மாவை வணங்குகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Exit mobile version