அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் இன்று திறக்கப்பட உள்ளது. பீனிக்ஸ் பறவை வடிவத்தில் கட்டப்பட்டுள்ள மண்டபம், டிஜிட்டல் அருங்காட்சியகம், தடாகம், மியாவாக்கி தோட்டம் உள்ளிட்ட நினைவிடத்தின் பல்வேறு சிறப்புகள் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு…
தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த புரட்சித்தலைவி ஜெயலலிதா, கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் நாள் மறைந்த நிலையில் அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது
அந்த இடத்தில் ஜெயலலிதாவுக்கு பிரமாண்ட நினைவிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு, கடந்த 2018ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் நினைவிடத்திற்கான அடிக்கல்லை நாட்டினர்.
சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் 80 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நினைவிடத்தில் ஜெயலலிதாவின் வாழ்நாள் சாதனைகளை நினைவுகூரும் வகையில் மண்டபமும், அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் நினைவு மண்டபமானது, சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் அருங்காட்சியகமானது 8 ஆயிரத்து 555 சதுர அடி பரப்பளவில் பளிங்குகற்கள் மற்றும் கருங்கற்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று புகைப்படங்களும், மெழுகுச் சிலைகளும் இடம்பெற உள்ளன.
நினைவிட வளாகத்தில் பொதுமக்கள் வந்து செல்ல வசதியாக உயர்தர கருங்கல்லான நடைபாதை
அமைக்கப்பட்டுள்ளது. இந்நடைபாதை கூரைகளின் மீது சூரிய ஓளி தகடுகள் பதிக்கப்பட்டு அதன்மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது
பீனிக்ஸ் நினைவு மண்டபத்திற்கு பின்புறம் மியாவாக்கி தோட்டமும், மண்டபத்தை சுற்றிலும் கருங்கற்கள் பதிக்கப்பட்ட தடாகங்களும், தோட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஜெயலலிதா நினைவிடம் ஒரு சிறிய சுற்றுலாத் தலமாகவே மாற்றப்பட்டுள்ளது
நுழைவுவாயில் தடாகத்தின் அருகில் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் வெண்கலச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. நினைவிடத்திற்கு வாகனங்கள் வந்து செல்ல ஏதுவாக 265 மீட்டர் நீளம் மற்றும் 9 மீட்டர் அகலத்தில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா நினைவு மண்டப நுழைவு வாயிலின் இருபுறங்களிலும், கருங்கல்லில் செய்யப்பட்ட சிங்க சிலைகள் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. இத்துடன் கண்காணிப்பு கேமராக்கள், பொது ஒலி அமைப்பு, அணையா விளக்கு ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. பார்வையாளர்கள் வாகனங்களை நிறுத்த ஏதுவாக இரு இடங்களில் வாகன நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு வசதிகளுடன், வித்தியாசமான முறையில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் மெரினா கடற்கரைக்கும் வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ((நினைவு மண்டபம், திறக்கப்படும் நாளை அதிமுகவினரும் பொதுமக்களும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்))