மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.
விழுப்புரம் வடக்கு மாவட்டம் மேல்மலையனூர் தெற்கு ஒன்றியம் சார்பாக வளத்தியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட 13-வது வார்டில் சுமார் 4 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை மின்துறை அமைச்சர் தங்கமணி திறந்துவைத்தார். பின்னர், 24-வது வார்டுக்கான அதிமுக அலுவலகம் திறந்துவைக்கப்பட்டு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், திமுகவைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி, வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பிறந்த 7 பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் வெள்ளிக் கொலுசுகள் அணிவிக்கப்பட்டன. குடியாத்தம் நகர அதிமுக சார்பாக, வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி இதனை வழங்கினார்.
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில், திருக்காட்டுப்பள்ளி பேருந்து நிலையம் அருகே, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.